அமைச்சரவையில் முறுகல் நிலை – பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்..!

அமைச்சரவையில் முறுகல் நிலை – பதவி விலக தயாராகும் இராஜாங்க அமைச்சர்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
சமகால அரசாங்கத்திற்குள் அமைச்சு பதவிகள் தொடர்பில் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் தங்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பொறுப்புகளை தமது இராஜாங்க அமைச்சர்களிடம் ஒப்படைக்காததால் பெரும்பாலான இராஜாங்க அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

சில அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று அமைச்சுக்கள் என பல அமைச்சுக்கள் இருந்தாலும் ஓரிரு சிறு நிறுவனங்களைத் தவிர அரச அமைச்சர்களுக்கு எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை.

கருத்து மோதல்

இதன் காரணமாக அமைச்சுக்களுக்கு சென்று தேவையற்ற வேலைகளை பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல இராஜாங்க அமைச்சர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

அமைச்சுக்களில் பொறுப்புக்கள் வழங்கப்படாமையால் சில அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு இடையில் கருத்து மோதல்களும் ஏற்பட்டுள்ளன.

இலங்கை அமைச்சரவையில் 20 அமைச்சரவை அமைச்சர்களும், 38 இராஜாங்க அமைச்சர்களும் உள்ளனர்.

38 இராஜாங்க அமைச்சர்களில் சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அமைச்சுக்களில் குறிப்பிட்ட பொறுப்புகள் வழங்கப்படவில்லை.

இவர்களில் சுமார் 20 பேர் அரசாங்க அமைச்சுக்களை விட்டு விலகுவது தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றங்கள்

தேவேளை, இன்னும் சில தினங்களில் இரண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு அதிபர் ரணில் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்டர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும் இரண்டு அமைச்சுப் பதவிகளும் அவர்களுக்கே வழங்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் சிரேஷ்டர்களுக்கு அமைச்சுப் பதவிகளைக் கோரிய போதும் அவர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.