துருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துவானுக்கு மீண்டும் வெற்றி..!

துருக்கி அதிபர் தேர்தலில் ஏர்துவானுக்கு மீண்டும் வெற்றி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
துருக்கியின் அதிபர் தேர்தலில் ரிசெப் தையீப் ஏர்துவான் மீண்டும் வெற்றிபெற்றுள்ளார்.

இதன்மூலம் அவருக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் அதிகாரத்தில் நீடிப்பதற்கான ஆணையை துருக்கி மக்கள் வழங்கியுள்ளனர்.

தோல்வியை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சி

துருக்கியில் இடம்பெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், ரிசெப் தையீப் ஏர்துவான், 52 வீதத்திற்கும் சற்று அதிகமான வாக்குக்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் இந்தத் தேர்தல் தோல்வியை ஏற்க மறுத்துள்ள எதிர்க்கட்சி அதிபர் வேட்பாளர் Kemal Kilicdaroglu, இது நியாயமற்ற தேர்தல் எனக் கூறியுள்ளார்.

கடந்த 2003 ஆம் ஆண்டு துருக்கியின் பிரதமராக பொறுப்பேற்ற ரிசெப் தையீப் ஏர்துவான், கடந்த 2014 ஆம் ஆண்டு நாட்டின் அதிபராக முதலில் தெரிவானார்.

இந்த நிலையில் அங்காராவில் ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ரிசெப் தையீப் ஏர்துவான், துருக்கியின் 85 மில்லியன் மக்களுக்கும் கிடைத்த வெற்றி இதுவெனக் கூறியுள்ளார்.

வெளிநாட்டுத் தலைவர்கள் வாழ்த்து

ரிசெப் தையீப் ஏர்துவானின் வெற்றியை அவரது ஆதரவாளர்கள் வீதிகளில் கொண்டாடிவரும் அதேவேளை, வெளிநாட்டுத் தலைவர்களும் அதிபருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரிசெப் தையீப் ஏர்துவானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் துருக்கியுடனான நேட்டோவின் பிணைப்பை சுட்டிக்காட்டியுள்ளனர்.

நேட்டோ கூட்டணி நாடு என்ற வகையில் இருதரப்பு விவகாரங்கள் மற்றும் பகிரப்பட்ட உலகளாவிய விவகாரங்களில் துருக்கியுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

ஜேர்மன் சான்ஷிலர் ஓலாப் ஸ்சொட்ஸ் மற்றும் பிரேசில் அதிபர் லூலா த சில்வா ஆகியோரும் ரிசெப் தையீப் ஏர்துவானுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.