
அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகமா? இதுவரை இஸ்ரேல் உறுதியான ஆதாரங்கள் எதனையும் முன்வைக்கவில்லை – கார்டியன்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அல்ஸிபா மருத்துவமனை ஹமாசின் தலைமையகம் என தான் தெரிவித்துவந்துள்ளதை நிரூபிப்பதற்கான போதிய ஆதாரங்களை இதுவரை இஸ்ரேல் முன்வைக்கவில்லை என கார்டியன் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையை கைப்பற்றுவதற்கு முன்னர் அந்த மருத்துவமனை ஹமாசின் தலைப்பீடம் என சித்தரிப்பதற்கு இஸ்ரேலிய படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள கார்டியன் அங்கிருந்தே தாக்குதல்கள் திட்டமிடப்படுகின்றன என இஸ்ரேல் தெரிவித்துவந்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இதுவரை இஸ்ரேல் அதற்கான போதிய ஆதாரங்களை முன்வைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள கார்டியன் இதுவரை மருத்துவமனையில் கைப்பற்றியதாக சிறிய ரக ஆயுதங்கள் சிலவற்றையே காண்பித்துள்ளது எனவும் கார்டியன் தெரிவித்துள்ளது.
அந்த ஆயுதங்கள் அங்கு ஆயுததாரிகளின் பிரசன்னம் இருந்திருக்கலாம் என்பதை தெரிவித்துள்ளன ஆனால் இஸ்ரேல் தெரிவித்தது போல அல்ஸிபா மருத்துவமனை ஒரு கட்டளைப்பீடமாக அல்லது தலைமையகமாக பயன்படுத்தப்பட்டது என்பதை நிரூபிப்பதற்கு இந்த ஆதாரங்கள் போதுமானவை இல்லை எனவும் குறிப்பிட்டு;ளது.
இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ள ஆதாரங்கள் கூட சந்தேகங்களை எழுப்புவதாக காணப்படுகின்றன – மீட்கப்பட்ட துப்பாக்கியை இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவர் காண்பிக்கும் வீடியோவை இஸ்ரேலிய படையினர் வெளியிட்டுள்ளனர், இந்த வீடியோ அந்த பகுதிக்கு பத்திரிகையாளர்கள் செல்வதற்கு முன்னர் படமாக்கப்பட்டுள்ளது என கார்டியன் தெரிவித்துள்ளது.
அதன் பின்னர் காண்பிக்கப்பட்ட வீடியோவில் பல துப்பாக்கிகள் காணப்படுகின்றன – இஸ்ரேலிய படையினர் அந்த வீடியோ எடிட் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளனர் ஆனால் அந்த வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது என கார்டியன் குறிப்பிட்டுள்ளது.