பொதுத் தேர்தலை, அவசரமாக முதலில் நடத்துங்கள் – ஹக்கீம்..!

பொதுத் தேர்தலை, அவசரமாக முதலில் நடத்துங்கள் – ஹக்கீம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை மாற்றம் என்பது சங்கீதக் கதிரை விளையாட்டாக இருந்து வருவதாகவும், பாராளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அண்மையில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டுள்ளார்

அட்டாளைச்சேனை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு அதுபற்றி மேலும் தெரிவித்துள்ளதாவது,

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை பதவியில் இருக்கின்ற ஜனாதிபதிக்கு ஏற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொள்வதும், தக்க வைத்துக் கொள்வதுமான ‘சங்கீதக் கதிரை’ விளையாட்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர் .ஜயவர்தனவைத் தொடர்ந்து, நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இதனை நீக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு புறமும், நீக்கத் தேவை இல்லை என்ற போராட்டம் மறு புறமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இன்றுள்ள ஜனாதிபதி இந்த இரண்டு நிலைபாடுகளிலும் இருந்திருக்கின்றார். அவர் வெற்றி கொள்ள முடியாது என்ற சந்தர்ப்பத்தில் நீக்க வேண்டும் என்றும், பதவியில் அமரும் போது நீக்க வேண்டாம் என்றும் சொல்லுவார். அவர் பிரதமராக பதவி வகித்தபோது நாங்கள் அவரது அரசாங்கங்களில் இருந்திருக்கிறோம்.

ஆனால், சிறுபான்மை சமூகம் என்ற அடிப்படையில், இந்த நாட்டில் ஓர் ஆட்சித் தலைமையைத் தீர்மானிப்பதில், அதாவது, நிறைவேற்று அதிகாரத்தின் தலைமைப் பீடமாக ஒருவரை தீர்மானிக்கும் விவகாரத்தில் முழு நாடுமே ஒரு தனித் தொகுதியாக கணிக்கப்பட்டு, வாக்களிக்கின்றபோது எங்கள் சமூகத்தின் பேரம் பேசும் சக்தி வலுவாக இருக்கின்ற காரணத்தினால், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும், அதே வேளை பாராளுமன்றத்தைப் பலவீனப்படுத்தாமல் அதன் அதிகாரங்களை சற்று அதிகரித்து கொள்வதற்கு சில மாற்றங்களைச் செய்து நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையைக் கொண்டு இந்த நாட்டை முன்கொண்டு போக வேண்டும் என்ற நிலைபாட்டில்தான் நாங்கள் தொடர்ந்தும் இருந்து வருகின்றோம்.

சுயாதீனம் என்பது முக்கியமானது. அரசியல் தலையீடுகள் அதிகமாக இருக்கின்றபோது, நாட்டின் நல்லாட்சி பாதிக்கப்படுகின்றது என்ற விவகாரங்கள் எல்லா வற்றையும் நன்றாக சீர் தூக்கி பார்த்த பிறகுதான் இதற்கான முடிவை எங்களால் கூற முடியும்.

எடுத்த எடுப்பிலேயே, ஆட்சிக் கதிரையில் இருப்பவர்களுடைய விருப்பு, வெறுப்புகளுக்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதும், நீக்காமல் இருப்பதும் என்ற விவகாரத்தை விடுத்து, மிகச் சரியாக அதனை செய்வதாக இருந்தால் நாடு முழுவதும் சர்வஜன வாக்கடுப்பு நடத்தியாக வேண்டும். எனவே அந்த சர்வஜன வாக்களிப்பொன்றை நடத்தி தொடர்ந்தும் ஆட்சி கதிரையில் நீடிக்க முடியுமா என்று அதற்கு ஆசைப்படுகின்றவர்கள் சொல்லுகின்ற போது நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

எனவே இந்த விவகாரத்தில் எங்களின் நிலைப்பாடு, இப்போது அதற்கான தருணம் அல்ல என்பதாகும்.பொதுத் தேர்தலை முதலில் நடத்துங்கள். சட்டரீதியாக பாராளுமன்றம் இன்னும் காலாவதியாகவில்லை. ஆனால், மக்கள் ஆணையை முழுப் பாராளுமன்றமும் இழந்து விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த மக்கள் போராட்டத்திற்கு பிறகு இன்று இருக்கின்ற பாராளுமன்றத்துக்கு மக்கள் ஆணை இல்லை என்ற ஒரு நிலைமைதான் யதார்த்த பூர்வமாக இருக்கின்றது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோ, ஜனாதிபதியோ இருக்கின்றார்கள் என்பதற்காக இது மக்கள் ஆணை உள்ள ஒரு பாராளுமன்றம் என்ற யதார்த்த நிலை மக்கள் மத்தியில் இல்லை. 225 உறுப்பினர்களையும் ‘வீட்டுக்கு போங்கள்’ என்றுதான் சொல்லுகின்றார்கள். இவ்வாறான சூழ்நிலையில் எங்களுடைய தார்மீகக் கடமை அவசரமாக ஒரு பொதுத் தேர்தலுக்குச் செல்வதாகும்.

இந்த அரசியலமைப்பு மாற்றம் என்ற விஷயமெல்லாம் இந்தப் பாராளுமன்றத்தில் சாத்தியமாகாது. அவ்வாறு நினைப்பதும் கூட அபத்தமானது, இப்போதைக்கு அது தேவையற்றது என்பதுதான் எங்களது நிலைபாடு என்று கூறியுள்ளார்.