அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற  உறுப்பினர்கள், ஜனாதிபதி சந்திப்பு – திருகோணமலை மாவட்ட எம்.பிகளுக்கு அழைப்பில்லை..!

அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி சந்திப்பு – திருகோணமலை மாவட்ட எம்.பிகளுக்கு அழைப்பில்லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – (யூ.எல். மப்றூக், பட உதவி: நூறுல் ஹுதா உமர்)

அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சில முஸ்லிம் எம்.பிகளுக்களை இன்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹிர் மௌலானா, தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் எஸ்.எம்.எம். முஸாரப் ஆகியோர் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். தௌபீக் (முஸ்லிம் காங்கிரஸ்) மற்றும் இம்ரான் மஹ்றூப் (ஐக்கிய மக்கள் சக்தி) ஆகியோருக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விடுக்கப்படவில்லை என, அவர்கள் இவருவரும் தெரிவித்தனர்.

திருகோணமலை மாவட்டத்தில் எஸ்.எஸ். தௌபீக் மற்றும் இம்ரான் மஹ்றூப் மட்டுமே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்ரான் எம்.பி சந்தேகம்

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் கூறினார்.

கிழக்கிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாமன்ற உறுப்பினர்களில் – திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எஸ். தௌபீக் மாத்திரம் அழைக்கப்படாமை ஏன் எனவும் அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த சந்திப்பில் கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக பேசப்பட்டிருக்குமாயின், என்னையும் அவர்கள் அழைத்திருக்கக் கூடும். ஆனால் அங்கு வேறு ஏதோ விடயங்கள் பேசப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். உதாரணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – தமக்கு ஆதரவைக் கோருவதற்காக மேற்படி எம்.பிகளை அழைத்திருக்லாம். அதன் காரணமாக என்னைத் தவிர்த்திருக்கலாம் என்று நினைக்கிறேன்.

மறுபுறம், திருகோணமலையிலுள்ள பல்வேறு வளங்களை இந்தியாவுக்கு வழங்குவதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு நான் தொடர்ச்சியாக எதிர்ப்பை தெரிவித்து வருகின்றேன். எனவே, இந்த சந்திப்புக்கு என்னை அழைத்தால் அங்கும் அது தொடர்பாக நான் எதிர்ப்பை வெளியிட்டிருப்பேன். அதனை யோசித்தும் இந்த சந்திப்பில் என்னை அவர்கள் தவிர்த்திருக்கலாம்’ என்று, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றூப் குறிப்பிட்டார்.

ஏற்கனவே அரசாங்கத்துக்கு முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பைசல் காசிம் மற்றும் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் பல்வேறு வழிகளிலும் ஆதரவைத் வழங்கி வரும் நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவும் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளமை கவனத்துக்குரியது.