எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தல் நிச்சயம் நடைபெறும் – ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்துள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற What’s New சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையில் பல ஆட்சி முறைகள் இருந்தன. ஒன்று ஆங்கிலேயர் கால முறைமை மற்றையது அதன்படியே அமைச்சரவை செயற்படுகிறது. மற்றையது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை. நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. சட்டமியற்றும் அதிகாரங்கள் சட்டவாக்க சபையிடம் உள்ளது. அதன்படி ஜனாதிபதி ஒரு கட்சியிலிருந்து தெரிவாகும் போது, சட்டவாக்க சபைக்கு மற்றொரு கட்சியிலிருந்து உறுப்பினர்கள் தெரிவாகலாம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் அதில் வென்று ஜனாதிபதியாகப் போவதாகவும் சொல்லும் எந்நவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதாக இதுவரை அறிவிக்கவில்லை. அதனால் பாராளுமன்றத்தை பலப்படுத்தும் வேலைத்திட்டத்தை தயாரிக்க வேண்டியது அவசியம்.