தாஜுதீன் கொலையில் முன்னாள் இராஜதந்திரியின் பெயரும் இணைப்பு

தாஜுதீன் கொலையில் முன்னாள் இராஜதந்திரியின் பெயரும் இணைப்பு

முன்னாள் ரக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பான விசாரணையில் தற்போது முன்னாள் இராஜதந்திரி ஒருவரின் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் இராஜதந்திரியான சேபால ரட்நாயக்கவின் பெயரே இந்த விடயத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

ரட்நாயக்க லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்தில் சேவையாற்றிய போது தாஜூதீனின் கொலை தொடர்பான சந்தேகநபர் ஒருவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல உதவினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தாஜூதீனின் கொலை தொடர்பில் பலர் இலங்கையிலேயே தற்போதும் இருக்கின்றனர். எனினும் ஒருவர் மாத்திரம் லண்டனுக்கு ரட்நாயக்கவின் உதவியுடன் தப்பிச்சென்றுள்ளார்.

சட்டத்தரணியான ரட்நாயக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மிக நெருங்கிய நண்பராவார். அவர் காலத்தில் ஜனாதிபதி செயலக சிரேஷ்ட சட்ட அலுவலராகவும் 2013ல் குடிவரவு அலுவலராகவும் செயற்பட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மைத்திரிபால சிறிசேன, 14வயது சிறுவன் ஒருவரை கடத்தி வைத்து அவரின் தாயை மிரட்டியதாக பொய் பிரசாரம் மேற்கொண்ட வழக்கில் ரட்நாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது

இந்நிலையில் முன்னாள் இராஜதந்திரியான அவருக்கு எதிராக இன்டர்போல் மூலம் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.