ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படும் – கபீர் ஹாசிம்

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றப்படவுள்ளதோடு இதன்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதித் தலைவர் உட்பட பல்வேறுபட்ட பதவிகள் நீக்கப்படுமென கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

ஜனவரி முதல் வாரத்தில் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாசீம் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஐக்கிய தேசியக் கட்சியில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. இது தொடர்பாக கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய நிறைவேற்றுக் குழுக் கூட்டத் தொடரில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த யாப்பு மாற்றத்தில் கட்சியில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பிரதித் தலைவர் உட்பட பல்வேறு பதவிகள் நீக்கப்படவுள்ளதுடன், முக்கிய பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்படும் சாத்தியமும் உள்ளது.

மாவட்டங்கள் தோறும் தேர்தல் தொகுதிகள் தோறும் கட்சிக் கிளைகள் அமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

கடந்த காலங்களில் அரசியல் பழிவாங்கள்களுக்கு உள்ளாக்கப்பட்ட கட்சி ஆதரவாளர்களின் முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டு தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.

அதேவேளை மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்படவுள்ளது.