சங்காவின் “டக்- அவுட்”உம் அப்ரிடியின் அனல் பந்துவீச்சில் பெஷ்வர் ஷல்மி அணியின் அசத்தல் வெற்றியும்

சங்காவின் “டக்- அவுட்”உம் அப்ரிடியின் அனல் பந்துவீச்சில் பெஷ்வர் ஷல்மி அணியின் அசத்தல் வெற்றியும்

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் நேற்றுமுன்தினம் நடந்த போட்டியில் குயூட்ட கிளாடியட்டர்ஸ்- பெஷ்வர் ஷல்மி அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய குயூட்ட கிளாடியட்டர்ஸ் அணி அப்ரிடியின் சுழலில் சிக்கியது.

அணித்தலைவர் ஷேஷாட் 21 ஓட்டங்கள் எடுத்தார். சங்கக்காரா டக்- அவுட்டாக வெளியேறி ஏமாற்றம் அளித்தார்.

பின்னர் வந்த எலியாட் அதிரடியாக விளையாடி 29 பந்தில் 3 சிக்சர், 2 பவுண்டரி என 40 ஓட்டங்கள் குவித்தார்.

மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற அந்த அணி 18 ஓவரிலே 129 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அப்ரிடி 7 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். வஹாப் ரியாஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய பெஷ்வர் ஷல்மி அணிக்கு ஹபீஸ் (36), டாவிட் மாலன் நல்ல தொடக்க கொடுத்தார்.

அடுத்து வந்த கம்ரான் அக்மல் 17 ஓட்டங்கள் எடுக்க, தொடர்ந்து சிறப்பாக ஆடிய டாவிட் மாலன் அரைசதம் கடந்தார்.

இதனால் அந்த அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட் மட்டும் இழந்து 130 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

டாவிட் மாலன் 60 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 5 விக்கெட்டுகள் அள்ளிய அப்ரிடி ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.