சிறுநீரக வங்கி கோரி மனுத்தாக்கல்

சிறுநீரக வங்கி கோரி மனுத்தாக்கல்

சிறுநீரக நோயாளர்களைக் காப்பாற்றுவதற்காக சிறுநீரகங்களைத் தானம் செய்வோருக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், சிறுநீரக வங்கியொன்றை ஸ்தாபிக்குமாறு கட்டளையிடக்கோரி, ரிட் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்குக் கட்டளையிடுமாறே, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்வர்ணா போபிட்டிய மன்றத்தினால் இந்தமனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பி.ஜீ மஹிபால ஆகியோர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். நாட்டு மக்களின் சுகாதார நிலைமையை மேம்படுத்துவதற்கான ஆதரவை நல்குவதற்கு, சுகாதார அதிகாரிகள் கட்டுண்டுள்ளனர் என்றும் குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்காக, நல்ல சுகாதார நிலைமை ஏற்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் வடமத்திய மாகாணத்தில், சிறுநீரக நோயாளர்கள் அதிகளவில் உள்ளனர். ஏனைய மாகாணங்களிலும் சிறுசீரக நோயாளர்கள் உள்ளனர்.

தான் மரணமடைந்ததன் பின்னர், சிறுநீரகங்களைத் தானம் செய்வதற்குப் பலரும் விரும்புகின்றனர். என்றாலும், அவற்றைக் களஞ்சியப்படுத்தி வைப்பதற்கு உரிய இடம் இல்லாத நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது. அந்நிலைமையைப் போக்குவதற்கு, தேசிய இரத்த வங்கிக்குச் சமமான முறையில் சிறுநீரக வங்கியொன்றை உருவாக்குமாறும் மனுவில் கோரப்பட்டுள்ளது.