அர்ஜுன பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – துறைமுக தொழிற்சங்கம்

அர்ஜுன பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் – துறைமுக தொழிற்சங்கம்

துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் செயற்பாடுகள் காரணமாக துறைமுக அதிகார சபை சுமார் 800 கோடி ரூபா இழப்பைச் சந்தித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

துறைமுக அபிவிருத்தி அமைச்சராக அர்ஜுன ரணதுங்க நியமிக்கப்பட்டது முதல் அவரது குடும்ப உறவினர்களின் ஆதிக்கம் அமைச்சில் அதிகரித்துள்ளது.

இதன் காரணமாகவே அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் பொருளாதார இழப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளதாகவும் குறித்த தொழிற்சங்க முக்கியஸ்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்க முற்படும் தொழிற்சங்க பிரதிநிதிகளை அமைச்சர் அர்ஜுன திட்டி அனுப்பிவிடுவதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

எனவே துறைமுக அபிவிருத்தி அமைச்சுப் பொறுப்பிலிருந்து அர்ஜுன ரணதுங்க மாற்றப்படும் வரை அவருக்கு எதிராக தொடர் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க துறைமுக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 17 தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.