நால்லாட்சி மக்களின் இரத்த நாடியினி வெட்டிப் புசிக்கின்றது  – அநுர

நால்லாட்சி மக்களின் இரத்த நாடியினி வெட்டிப் புசிக்கின்றது – அநுர

சாதாரண மக்களின் நாடியை வெட்டி அவர்களின் இரத்தத்தை போசணைக்கு எடுக்கும் ஆட்சியே தற்போதைய நல்லாட்சி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்ல கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கம் விட்டுச்சென்ற கடனை அடைப்பதற்காகவே தற்போது நாட்டில் வட் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் கூறிவருகின்றது. கடனை அடைப்பதானால் நாட்டில் ஊழலில் ஈடுபட்டவர்களிடம் இருந்து பணத்தை பெற்று கடனை அடைக்கலாமே, ஏன் சாதாரண மக்களின் இரத்தத்தை குடிக்கிறார்கள் என அநுர கேள்வி எழுப்பினார்.

வட் வரி அதிகரிக்கப்பட்டாலும் மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்கு வரி அதிகரிக்கப்படாது என கூறிய அரசு, தற்போது விலை அதிகரித்துள்ள அனைத்து பொருட்களுமே மக்களின் அத்தியாவசியப் பொருட்களுக்குள் அடங்கும் என சுட்டிக்காட்டினார்.

முன்னர் 8% வும், 11% வும் இருந்த சேவை மற்றும் பொருட்களின் வரி தற்போது 15% ஆக அதிகரிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதார நிலையை பெரிதும் பாதித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் கூறினார்.

அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை அதிகரிக்கப்படவில்லை என கூறிவரும் அரசு, வேளைக்கான உணவு, மருந்து, தொலைத்தொடர்பு, மின்சாரம், நீர் போன்ற அனைத்திற்கும் விலையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒரு விடயம் புலப்படுகின்றது. “இந்த அரசாங்கத்திற்கு அத்தியாவசியப் பொருட்கள் என்றால் என்ன என்பது தெரியவில்லை” என குற்றம் சுமத்தினார்.

வரும் வாரத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசுகையில், கடந்த அரசு விட்டுச் சென்ற கடனை, வரியை உயர்த்துவதன் மூலமே அடைக்கலாம் என கூறிக் கொண்டு, கட்சி அலுவலகங்கள், வாகனங்கள், தங்களுடைய வீட்டு கட்டுமானப் பணிகள் என தற்போதைய அரசாங்கமும் பணத்தை செலவு செய்கின்றது என அநுர குமார திசாநாயக்க தெளிவூட்டினார்.

மேலும் மக்களின் பணமானது பல நாடுகளில் கருப்புப் பணமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது. அவை தொடர்பில் சில தகவல்கள் கண்டறியப்பட்டாலும் கூட மேலும் பல நாடுகளில் இருக்கும் அதிகளவான கருப்புப் பணம் பற்றி இதுவரை கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

மேலும் விசாரணைகள் முடிவடைந்து குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட நிலையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை அரசாங்கமே தடுத்து நிறுத்தியுள்ளதாக இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.