சஜின் மஹிந்தர் இரகசிய சந்திப்பும் கசிந்த உண்மைகளும்..

சஜின் மஹிந்தர் இரகசிய சந்திப்பும் கசிந்த உண்மைகளும்..

கடந்த அரசாங்கத்தில் பாரிய மோசடியில் ஈடுபட்டவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன அடையாளப்படுத்தப்பட்டு, பின்னர் அரச சாட்சியாளராக மாறியிருந்தமை யாவரும் அறிந்ததே.

தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நோக்கில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைவிட்டு, சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் கடந்த 31ஆம் திகதி மஹிந்தவை இரகசியமான முறையில் சஜின் வாஸ் குணவர்தனவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு ஹோர்டன் பிரதேச வீடொன்றிற்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ச, அங்கு சஜினை சந்தித்துள்ளார்.

கலந்துரையாடலுக்காக மஹிந்த தரப்பை சேர்ந்த லொஹான் ரத்வத்தேயினால் அவரது வாகனத்தில் சஜினை மறைத்து அழைத்து வந்துள்ளார்.

மஹிந்த  ராஜபக்ஷவிடம்  உள்ள பெருந்தொகை கறுப்பு பணம், தேர்தலுக்காக கிடைத்த நிதியென கூறுமாறும், அதற்கு சாட்சியாக சஜின் முன் வர வேண்டும் என்ற மஹிந்தவின் யோசனைக்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அதற்கான சில ஆவண கோப்புகள் மஹிந்தவினால் சஜினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொரளையில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு லொஹான் ரத்வத்தேயுடன் சென்ற சஜின், அந்த ஆவணங்களை கடிதமாக மாற்றி தனது கையொப்பம் மற்றும் முத்திரையிட்டு, மீண்டும் அதே வாகனத்தில் ஹோர்டன் பிரதேசத்திற்கு சென்று மஹிந்தவிடம் ஒப்படைத்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர் சஜின் வாஸ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறுவதாக வழங்கிய உறுதிமொழியை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். எனினும் அவர் எந்த வழக்கிற்கு அரசாங்கத்தின் சாட்சியாளராக மாறினார் என இதுவரையில் தெரியவரவில்லை.

இந்நிலையில் அவர் மஹிந்த ராஜபக்ஷவை இரகசியமாக சந்தித்திருப்பது அரசாங்கத்தை முட்டாளாக்கும் ஒரு நடவடிக்கை என கூறப்படுகின்றது.

சஜின் வாஸ் குணவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசி என்பதும் குறிப்பிடத்தக்கது.