கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம்  இன்றுடன் நிறைவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 23 உள்ளூராட்சி மன்றங்களின் காலம் இன்றுடன் நிறைவடைகின்றது.

இந்த 23 உள்ளூராட்சி மன்றங்களினதும் காலம் மேலும் நீடிக்கப்பட மாட்டாது என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவற்றுள் 05 பிரதேச சபைகள், ஒரு நகர சபை மற்றும் 17 மாநகர சபைகளும் உள்ளடங்குகின்றன.

அவை, கொழும்பு, தெஹிவளை – கல்கிசை, ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே, கம்பஹா, நீர்கொழும்பு, குருணாகல், கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, அநுராதபுரம், மொரட்டுவ, பதுளை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கல்முனை ஆகிய மாநகர சபைகளும், கொடிகாவத்த – முல்லேரியா, குண்டசாலை, கடவத்சதர, சூரியவெவ, அம்பாந்தோட்டை அகிய பிரதேச சபைகள் மற்றும் கொலன்னாவை நகரசபை ஆகியனவாகும்.

நாடு பூராகவும் 335 உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பதுடன், அவற்றில் 312 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் 2015 மார்ச் 31ம் திகதியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் அந்த உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் அனைத்தும், ஆணையாளர்கள் மற்றும் நகர செயலாளர்களினால் கடந்த ஒரு வருடமும் மூன்று மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை நான்கரை ஆண்டு கால சேவையை பூர்த்தி செய்த கொழும்பு மாநகர சபையின் நகராதிபதி ஏ.ஜே.எம் முஸம்மில் தன்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஒன்றை இன்று ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்காக இன்று பகல் 2.00 மணிக்கு கொழும்பு மாநகர சபை வளாகத்தில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இலங்கையின் மிகப் பெரிய மாநகர சபையாக கொழும்பு மாநகர சபை காணப்படுகின்றமை கூறத்தக்கது.