மஹேலவுக்கும் முரளிக்கும் வெவ்வேறு சட்டங்களா.. தமிழரென அவமானப்படுத்துகிறது இலங்கை..

மஹேலவுக்கும் முரளிக்கும் வெவ்வேறு சட்டங்களா.. தமிழரென அவமானப்படுத்துகிறது இலங்கை..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து இலங்கை முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் விலகியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அணியின் முன்னாள் கெப்டன் குமார சங்கக்கார, அவருக்கு ஆதரவாகக் களத்தில் குதித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக பல ஆண்டு காலம் விளையாடி வந்த முத்தையா முரளிதரன், தற்போது ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அறிவுரையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஆஸ்திரேலிய அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

கண்டியில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. போட்டித் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக பல்லேகல மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி வீரர்களுக்கு முரளிதரன் பயிற்சி அளிக்க சென்றுள்ளார்.

அப்போது பிட்ச் பராமரிப்பாளருடன் முரளிதரனுக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இலங்கை அணியின் மேலாளர் சேனநாயகவுடன் முரளிதரன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்துக்கு மின்னஞ்சல் வழியாக புகார் அளித்திருந்தது.

குறித்த மின்னஞ்சலில், இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபால;

”இங்கே இரு பிரச்சினைகள் நடந்துள்ளன. இலங்கை அணியின் மேலாளர் சேனாநாயக, முரளிதரனால் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். இந்த விவகாரம் குறித்து சேனநாயக எனக்கு புகார் அளித்துள்ளார்.

எந்த முன் அனுமதியும் இல்லாமல் மைதானத்திற்கு ஆஸ்திரேலிய அணி வீரர்களை பயிற்சிக்காக முரளிதரன் அழைத்துச் சென்றுள்ளார். இது இரண்டாவது பிரச்சினை “ என அந்த புகாரில் கூறியிருந்தார்.

ஆனால் முரளிதரனோ;

”ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதால் தன்னை துரோகி போல நடந்துவதாகவும் எனது திறமையைப் பயன்படுத்திக் கொள்ள இலங்கை முன்வரவில்லை. என்னை மதிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்” என பதிலடி கொடுத்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து புகார் கடிதம் கிடைத்ததாகவும் ஆனால் பிரச்சினை சமதானமாக முடித்து வைக்கப்பட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தரப்பில் நேற்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து முத்தையா முரளிதரன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

”கண்டி சம்பவம் காரணமாக முரளிதரனுடன் ஆஸ்திரேலிய அணி மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது.

இனிமேல் முரளிதரன் ஆஸ்திரேலிய அணியின் டிரெஸ்சிங் அறைக்கு வரவேண்டாம்” என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு அறிவுரையாளர் பொறுப்பில் இருந்து முரளிதரன் விலகியுள்ளதாக சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையும் செய்தி வெளியிட்டுள்ளது.

“ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், முரளிதரனுடன் மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் கண்டி மைதான சம்பவம் காரணமாக முடிவுக்கு வந்துள்ளது எனவும், இந்த தகவலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியமும் ஒப்புக் கொண்டுள்ளது” என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மூன்று டெஸ்ட் 5 ஒருநாள், 2 டி20 போட்டிகள் கொண்ட இந்த ஒரு தொடருக்காக மட்டும்தான் ஆஸ்திரேலிய அணிக்கு பந்துவீச்சு அறிவுரையாளராகச் செயல்பட முரளிதரனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்திருந்தது. ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கையால், ஒரு போட்டிக்கு கூட அவரால் பயிற்சி அளிக்க முடியாமல் போய் விட்டது.

இதற்கிடையே இலங்கை அணியின் முன்னாள் கெப்டன் குமார சங்கக்கார, முரளிதரனுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

”முரளிதரன் இலங்கை மண்ணின் மைந்தன். அவர் இந்த நாட்டை நேசிக்கிறார். எந்த அணிக்கு பயிற்சியாளராகவோ அல்லது அறிவுரையாளராகவோ அவர் செயல்படலாம். இலங்கை கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டால், இலங்கை அணிக்கு கூட பயிற்சியாளராக இருப்பார். ஒரு வீரர் மற்ற அணிக்கு கன்சல்ட்டன்டாக செயல்பட்டால், கிரிக்கெட்டுக்குச் செய்யப்படும் சேவையாகக் கருத வேண்டுமே தவிர, தவறான கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது” என்று கூறியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.