அரச பணத்தில் கோத்தாயவின் மகனுக்கு ஆடம்பர வீடு

அரச பணத்தில் கோத்தாயவின் மகனுக்கு ஆடம்பர வீடு

கடந்த ஆட்சிக்காலத்தில் கோடிக்கணக்கான அரச பணத்தை செலுத்தி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஆடம்பர வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்குமிடத்தை வழங்கியது யார் என்பதை கண்டறியுமாறு கோரி வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்று பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது சம்பந்தமான ஆவணங்களை நிதி மோசடி விசாரணைப் பிரிவில் அமைச்சர் கையளித்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் நகர தூதரக பிரதிநிதியின் அலுவலகத்திற்கு எனக் கூறி வாடகைக்கு எடுக்கப்பட்ட குறித்த வீட்டுக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு மாதாந்தம் 8 ஆயிரம் டொலர்களை செலுத்தியுள்ளதாகவும் அந்த வீட்டில் தூதரக அலுவலகம் இயங்கவில்லை எனவும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கோத்தபாய ராஜபக்சவின் புதல்வர் உயர்கல்விக்காக இந்த வீட்டில் தங்கியிருந்தது அமெரிக்காவுக்கான இலங்கை தூதரகத்தின் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதாக தனது முறைப்பாட்டில் கூறியுள்ள அமைச்சர், அவரது பாதுகாப்புக்காக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சேர்ந்த இரண்டு படையினர் பயன்படுத்தப்பட்டுள்ளனதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த படையினருக்கு இராணுவத்தில் மட்டுமல்லாது வெளிவிவகார அமைச்சிலும் சம்பளம் வழங்கப்பட்டுள்ளதை அமைச்சர் ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

வீட்டுக்கான மாத வாடகை, தண்ணீர் கட்டணம், தொலைக்காட்சி கட்டணங்களையும் வெளிவிவகார அமைச்சே செலுத்தியுள்ளது.

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், வீட்டை உரிமையாளரிடம் ஒப்படைக்கும் போது, வீட்டின் சேதத்திற்காக வெளிவிவகார அமைச்சு 10 ஆயிரம் டொலர்களை செலுத்த வேண்டியே நிலைமை ஏற்பட்டது எனவும் அமைச்சர் மங்கள தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இந்த குற்றச்சாட்டு குறித்து கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, மங்கள சமரவீர பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாக கூறியிருந்தார்.

அத்துடன் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.