நல்லிணக்க அறிக்கையைப் பெற ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவில்லை…

நல்லிணக்க அறிக்கையைப் பெற ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளவில்லை…

நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி, தனது இறுதி அறிக்கையை, நேற்றிரவு(03) கையளித்தது.

இதற்கான உத்தியோகபூர்வ வைபவம், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற போதிலும், அந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ அல்லது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ கலந்துகொள்ளவில்லை.

குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற தனியார் நிறுவனமொன்றின் வைபவத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்டதோடு, கிரியுல்லவில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டிருந்தார்.

ஆனால், பல மாதங்களாக கலந்தாலோசனைகள் இடம்பெற்று, நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முக்கியமான அறிக்கையாகக் கருதப்பட்ட குறித்த இந்த அறிக்கை கையளிக்கும் நிகழ்வில், அவர்களிருவரும் கலந்துகொள்ளவில்லை.

மாறாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர, அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்டோரே கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வுக்கு, ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்பதோடு, இதற்கான நேரடி ஒளிபரப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஊடகப் பிரிவால், அதற்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.