பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அப்ரிடி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அப்ரிடி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர்களில் ஒருவரான ஷாஹித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

பாகிஸ்தான் அணியில் 21 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடி வந்த ஷாஹித் அப்ரிடி ஒப்பற்ற வீரர் என்பதோடு பல்வேறு சர்ச்சைகளையும் சந்தித்துள்ளார்.

36 வயதான ஷாஹித் அப்ரிடி ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2010 ஆம் ஆண்டும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 2015 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். முன்னதாக பாகிஸ்தான் டி20 அணிக்காக 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண போட்டிகளில் அணித்தலைவராக இருந்தார்.

உலக கிண்ணத் தொடர் நிறைவுற்றதும் அணித்தலைவர் பதவியை ராஜினாமா செய்த ஷாஹித் அப்ரிடி தொடர்ந்து போட்டிகளில் விளையாடி வந்தார்.

1996 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் களம் இறங்கிய ஷாஹித் அப்ரிடி, தனது இரண்டாவது போட்டியிலேயே இலங்கைக்கு எதிராக 37 பந்துகளில் சதம் அடித்தது உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனை 19 ஆண்டுகளுக்கு முறியடிக்கப்படாமலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.

27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷாஹித் அப்ரிடி 1176 ஓட்டங்களை குவித்துள்ளார், அதிகபட்சமாக 156 ஓட்டங்களையும் 48 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 398 ஒரு நாள் போட்டிகளில் 8064 ஓட்டங்களை குவித்துள்ள ஷாஹித் அப்ரிடி அதிகபட்சமாக 124 ஓட்டங்களையும், லெக் ஸ்பின் மூலம் 395 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச டி-20 போட்டிகளை பொருத்த வரை 98 போட்டிகளில் களம் கண்ட ஷாஹித் அப்ரிடி 1405 ஓட்டங்களையும் 97 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.