
பாகிஸ்தானில் வெயிலின் தாக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 400ஆக உயர்வு
பாகிஸ்தானின் தெற்கு பகுதியில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பநிலை உள்ளது. இன்று காலை நிலவரப்படி சிந்து மாகாணத்தில் ஒட்டுமொத்தமாக 400 பேர் பலியாகி உள்ளனர். மாகாண தலைநகர் கராச்சியில் மட்டும் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் பேர் இறந்துள்ளனர். மேலும் பலர் வெயில் தொடர்பாக ஏற்படும் காய்ச்சல், உடல் வறட்சி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை வார்டுகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் மட்டும் 341 பேர் பலியாகியுள்ளதாகவும், தனியார் மருத்துவமனைகளில் வெப்ப பக்கவாதம், உடல் சோர்வு மற்றும் குறைந்த அழுத்தம் காரணமாக மேலும் பலர் பலியாகயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 3000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய ஜின்னா மருத்துவமனையின் கண்காணிப்பாளரான சீமா ஜமாலி, அங்கு மட்டும் 200 பேர் பலியானதாக தெரிவித்தார்.
அதே போல் அப்பாஸி ஷாகித் மருத்துவமனையில் 71 பேர் பலியாகியுள்ளதாக அங்கு பணிபுரியும் மருத்துவரான சயீத் குரேஷி கூறியுள்ளார். தொடர்ந்து சிந்து மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் மருந்தக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தவிர அந்நாட்டு ராணுவம் தரப்பில் வெயிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.