பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி…

பொய் சொல்லும் ஆண்களை கண்டுபிடிக்க புதிய வழி…

ஆண்கள் அதிக பொய் சொல்ல பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் பொய் சொல்ல அடிக்கடி தூண்டப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

யாரிடம் ஆண்கள் அதிக பொய் சொல்கிறார்கள்?’ என்ற கேள்விக்கு, ‘மனைவியிடம்தான் அதிகமாக பொய் சொல்கிறார்கள்’ என்பது பதிலாக இருக்கிறது. மனைவி மனம் கோணாமலிருக்க, மனைவியின் பார்வையில் தன் ‘இமேஜை’ காப்பாற்றிக்கொள்ள, குடும்பத்தில் சண்டை ஏற்படாமலிருக்க, தன்மீது அன்பு வைத்திருக்கும் மனைவியின் அன்பு குறைந்து விடாமலிருக்க.. இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆண்கள் அதிகமாக மனைவியிடம் பொய் சொல்கிறார்கள்.

ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று பொய்களையாவது மனைவியிடம் ஆண்கள் சொல்கிறார்கள். சில நேரங்களில் தன் தவறை மறைக்க, மனைவிக்கு ஐஸ்வைக்கும் விதத்தில் பொய் சொல்கிறார்கள். கோபமாக இருக்கும் மனைவியிடம், ‘உனக்கு இந்த டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. நீ ரொம்ப அழகா இருக்கே. கொஞ்சம் உடம்பு ஒல்லியாயிட்ட மாதிரி இருக்கு..’ என்பன போன்ற பொய்களை சொல்லி மனைவியின் கோபத்திலிருந்து தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

இந்த பொய் பற்றிய தகவல்களில் ஆண்களும், பெண்களும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை பற்றி பார்ப்போம்!

‘உன்னைப் போன்ற நல்ல மனைவி கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்று கணவர் சொன்னால், அவளிடமிருந்து சாதகமான விஷயம் ஏதோ ஒன்றை அவர் எதிர்பார்க்கிறார் என்று அர்த்தம். மனைவியிடம் ஒருவேளை பணம் இருக்கலாம். அதை எப்படியோ கணவர் மோப்பம் பிடித்துவிட்டார் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்.

ஆண்கள் தினசரி சொல்லக்கூடிய பொய்களே நிறைய இருக்கின்றன. போக்குவரத்து நெரிசல், ஆபீஸ் வேலை, திடீர் பார்ட்டி, போன் சார்ஜ் செய்யப்படவில்லை, போனை எடுக்க முடியாத அளவு பிஸி, போனை சைலண்டில் வைத்துவிட்டேன் என்பது போன்ற பொய்களை பெரும்பாலும் எல்லோரும் நம்பி விடுவார்கள். வீட்டிற்கு கணவர் வந்த பின்பு அவரிடம் கேள்விமேல் கேள்வி கேட்கும் மனைவியின் கணைகளிலிருந்து தப்பிக்க இது மாதிரியான பொய்கள் உதவும்.

# பெண்கள் சொல்லும் பொய்க்கும்- ஆண்கள் சொல்லும் பொய்க்கும் வித்தியாசம் உண்டா?
உண்டு!

பெண்கள் சொல்லும் பொய் ஒருவித பதற்றத்தோடு வெளிவரும். யாராவது கண்டுபிடித்து விடுவார்களோ என்ற தவிப்பு அதில் தென்படும். இரண்டு முறை திருப்பிக்கேட்டால் உளறிவிடுவார்கள். ஆண்கள் தான் மாட்டிக் கொள்ளாமல் பொய் சொல்லுவதில் சாமர்த்தியசாலிகள் என்று ஆய்வுகள் சொல்லுகின்றன. அதை ஒரு தனித்தகுதியாகவே நினைக்கிறார்கள். தன்னை உயர்வாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பெரும்பாலும் பொய் சொல்லுகிறார்கள். பொய் வெளிப்பட்டுவிட்டால் சமாளிக்கவும் தெரிந்துவைத்திருக்கிறார்கள்.