கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…

கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் மேல் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். குறித்த மனு நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் முன்பு இன்று(09) விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள், மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கோவிலுக்குள் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் தவிர மற்றவர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்தனர்.

மேலும் கோவில் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். கோவிலில் தீ தடுப்பு கருவிகள் எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அந்த கருவிகளை கையாளுவது குறித்து கோவில் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்கவேண்டும். கோவில் முழு மின் இணைப்பையும் மாற்றி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிக்காக தொல்லியல் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்ட குழு அமைப்பது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினரை (சி.ஐ.எஸ்.எப்) பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தலாம்.

இதுதொடர்பாக தமிழக அரசு மார்ச் 13 ஆம் திகதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.