சீன பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சி கண்டது  ஏன்

சீன பங்குச் சந்தை திடீரென வீழ்ச்சி கண்டது ஏன்

உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்குகிறது. எனினும், ஓரிரு ஆண்டுகளாக, சீனாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. கடந்த ஆண்டு, சீனாவின் உள்நாட்டு உற்பத்தி, 7 சதவீதத்திற்கும் கீழாக சரிவடைந்துள்ளது. தேவை குறைந்து, தயாரிப்பு துறையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு, அந்நாட்டின் ரியல் எஸ்டேட் துறையும் படுத்து விட்டது. இதனால், சில்லரை முதலீட்டாளர்களுக்கு, பங்குச் சந்தை உட்பட, மாற்று முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா எடுத்தது.
குறிப்பாக, உள்நாட்டு தேவையை அதிகரிக்க, பங்குச் சந்தை சார்ந்த வருவாய் அவசியம் என்பதை கருத்தில் கொண்டு, பங்குச் சந்தைகளில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, பங்கு தரகர்களுக்கான கடன் வரம்பு உயர்த்தப்பட்டது. இதனால், ஏராளமான சில்லரை முதலீட்டாளர்கள், குறுகிய காலத்தில் லாபம் ஈட்டும் நோக்கில், கடன் வாங்கி பங்குகளில் முதலீடு செய்யத் துவங்கினர்.இதன் காரணமாக, கடந்த ஓராண்டில், சீன நிறுவன பங்குகளின் விலை, கிடு கிடுவென உயர்ந்தது. ஷாங்காய் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், கடந்த ஓராண்டில், 150 சதவீதம் அதிகரித்தது. இதே காலத்தில், சீன பங்குச் சந்தைகளின் மதிப்பு, ஐந்து மடங்கு அதிகரித்து, 32,200 கோடி டாலர் உயர்ந்தது.

இதையடுத்து, பங்குகளின் விலை, செயற்கையாக உயர்வதைத் தடுக்க, கடந்த ஜூன், 12ல், பங்கு தரகர்களுக்கான கடன் வரம்பு குறைக்கப்பட்டது.அது முதல், சீன பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. பங்கு விலை வீழ்ச்சியால், வரம்புத் தொகை குறைவாக உள்ள முதலீட்டாளர்களின் பங்குகளை, தரகர்கள் தாமாகவே விற்பனை செய்யத் துவங்கினர். இது, பங்குச் சந்தை மேலும் சரிவடைய வழி வகுத்தது.இதைத் தடுக்க, காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு முதலீட்டு வரம்பை, 5 சவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக, சீன அரசு உயர்த்தியது.

மேலும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவன பங்குகளை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, பங்கு தரகர்களுக்கு, 4,300 கோடி டாலர் கடன் வழங்கப்பட்டது. இத்துடன், முதன் முறையாக, ஓய்வூதிய நிதியத்திற்கு, பங்குகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

மேலும், நிதிச் சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கிக் கடனுக்கான வட்டியும் குறைக்கப்பட்டது.இத்தகைய நடவடிக்கைகளை எடுத்தும், சீன பங்குச் சந்தை எழாமல், தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. சீன பங்குச் சந்தைகளில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, 85 சதவீதமாக உள்ளது. அவர்கள் பீதியில், பங்குகளை விற்பனை செய்து வருவதால், கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில், முதலீட்டாளர்கள், 3 லட்சம் கோடி டாலர் அளவிலான முதலீட்டை இழந்துள்ளனர். இது, மொத்த பங்குச் சந்தை மதிப்பில், 40 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.இதனிடையே, இரண்டு நாள் தொடர் சரிவிற்குப் பின், நேற்று சீன பங்குச் சந்தைகள் சற்றே ஏற்றம் கண்டன.

(riz)