2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வேலைத்திட்டம்…

2025இல் பால் உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான வேலைத்திட்டம்…

2025ஆம் ஆண்டளவில் இலங்கையை திரவப்பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதற்கான பல்நோக்குடைய வேலைத்திட்டம் உள்ளடங்கிய சட்டமூலம் ஒன்றை உடனடியாக தயாரிக்குமாறு ஜனாதிபதி குறித்த துறைகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற தேசிய பால் உற்பத்தி மற்றும் பாவனை அபிவிருத்தி தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

கிராம சக்தி செயற்திட்டத்திற்கு அமைவாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

தற்போது 450 பாடசாலைகளில் செயற்படுத்தப்பட்டு வரும் திரவப்பால் வழங்கும் செயற்திட்டத்தை மேலும் விரிவாக்கி எதிர்வரும் காலங்களில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பால் குவளை ஒன்றை வழங்கும் நோக்குடைய வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

அதன் முதற்கட்டமாக சுமார் 17 இலட்சம் அளவிலான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு போஷாக்குடைய திரவப்பால் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலதிக திரவப்பால் உற்பத்திகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் உற்பத்தியை மேம்படுத்துவதன் மூலமாக பால் உற்பத்தியாளர்களுக்கு திரவப்பாலுக்கான நியாயமான விலையை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும், ஐஸ்கிறீம் உள்ளிட்ட பால் சம்பந்தப்பட்ட பால் உணவு பொருட்களின் உற்பத்தியில் பயன்படுத்தும் பொருட்கள் தரமானதா என கவனம் செலுத்தப்பட வேண்டியதுடன், உற்பத்தியில் தரமற்ற பொருட்களை உபயோகிப்பவர்கள் தொடர்பாக கண்டறிந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி இதன்போது அறிவுரை வழங்கினார்.

மீன்பிடி மற்றும் நீரியல் வள மேம்பாடு மற்றும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி த சொய்சா, கிராமிய பொருளாதார மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் டி.கே.ஆர்.ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ஷிரால் லக்திலக்க, தேசிய கால்நடை வள சபையின் தலைவர் கே.முத்துவிநாயம் உள்ளிட்ட அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.