2 ஆம் பாகத்தில் பேச்சுகள் அதிகம் இல்லை…

2 ஆம் பாகத்தில் பேச்சுகள் அதிகம் இல்லை…

விஸ்வரூபம்-2 படத்தில் பேச்சுகள் அதிகம் இடம்பெறவில்லை என்றும், அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருக்கிறார்.

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை டிரைலரை 2 கோடிக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.
இந்த டிரைலரில் “எந்த மதத்தையும் சார்ந்து இருக்கிறது பாவமல்ல பிரதர், ஆனால் தேசதுரோகியாக இருக்கிறது தப்பு” என்று கமல் பேசிய வசனங்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது.

டிரைலர் வெளியிடப்பட்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன் பேசியதாவது,

“விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் எல்லோருக்கும் பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த படம் தாமதத்திற்கு நாங்கள் காரணமல்ல. தடைகளை வென்று வருகிறது.

இதில் நடித்த நாசர், சேகர் கபூர், ராகுல் போஸ், ஆண்ட்ரியா, பூஜாகுமார் உள்ளிட்டோருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் காஸ்ட்யூம் பணியை சிறப்பாக செய்து விட்டுபோன கவுதமிக்கும் நன்றி.

விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்ற வைரமுத்து எழுதிய பாடலை இந்த படத்திலும் பயன்படுத்தி உள்ளோம். ஐந்தாறு டைரக்டர்களும் இதில் நடித்துள்ளனர். எனது அண்ணன் சந்திரஹாசன் அவருக்குள்ள சாராம்சத்தை எனக்குள் இறக்கிவிட்டு போய் இருக்கிறார். அவர் இடத்தை நிரப்ப எனக்கு இப்போது நிறைய சகோதரர்கள் கிடைத்து இருக்கிறார்கள்.

‘விஸ்வரூபம்-2’ படம் பல்லாயிரம் பிரிண்ட்களுடன் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் ஆகஸ்டு 10ஆம் திகதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும்.

முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும் சில முன்கதைகளுடன் இரண்டாம் பாகம் வருகிறது.

இரண்டாம் பாகம் படத்தில் அதிகம் பேச்சுகள் இடம்பெறவில்லை. அதிரடி சண்டை காட்சிகளும், உணர்வுப்பூர்வமான விஷயங்களும் அதிகம் இருக்கும்” இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.