ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

ராதா நிறுவனத்தின் நிதிமுறைகேடு தொடர்பில் மஹிந்தவிடம் விசாரணை?

புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிறுவனமான ராதாவின் நிதிமுறைக்கேடு தொடர்பில் குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் அதிகளவு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ராதா நிறுவனத்தின் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் கடமையாற்றியிருந்ததோடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் துறைசார் விடயங்களில் ஒன்றாக மேற்குறிப்பிட்ட நிறுவனம் காணப்பட்டது.

2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப் பேரலை அனர்த்தம் காரணமாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் இழந்தவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதே ராதா நிறுவனத்தின் பிரதான நோக்கமாக காணப்பட்டது.

மேலும் டிரான் அலஸ் ராதா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றிய காலத்தில், சாலிய விக்ரமசூரிய 169 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கைது செய்யப்பட்ட விக்ரமசூரிய 50,000 ரூபா ரொக்கம் மற்றும் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து டிரான் அலஸ் தம்மை கைது செய்வதனை தடுக்கும் நோக்கில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய திறைசேரியினால் ராதா நிறுவனத்திற்கு 1959 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்னும் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பில் வீடுகளை அமைப்பதாக 169 மில்லியன் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் ஒரு வீடு கூட நிர்மானிக்கப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இக்கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

இக்குறித்த விசாரணையானது, நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்தவிடம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(riz)