‘எல்ல’ பிரதேச சபைத் தலைவர் அமில பஸ்நாயக்கவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை…

‘எல்ல’ பிரதேச சபைத் தலைவர் அமில பஸ்நாயக்கவுக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை…

எல்ல பிரதேச சபைத் தலைவர் பி.எம்.அமில பஸ்நாயக்கவை, 30 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு, பண்டாரவளை நீதவான் நீதிமன்றம், இன்று(13) அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தால் குறிப்பிடப்படும் திகதியன்று, அவர் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் அதுவரை, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக் கிழமைகளிழல், எல்ல பொலிஸ் நிலையத்தில் ஆஜராகி, கையொப்பம் இ​டவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி, எல்ல பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட 8 பேர், எல்ல உல்லாசத்துறை தகவல் ​மத்திய நிலையத்துக்குள் சென்று, முகாமையாளரைத் தாக்கி, நிலையத்தின் உடமைகளை சூறையாடியிருந்த முறைப்பாட்டில், 7 பேர், ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பிரதேச சபைத் தலைவர் தலைமறைவாகியிருந்த நிலையில், அவர் இன்று (13), எல்ல பொலிஸ் நிலையத்தில் சரண​டைந்தார். இதையடுத்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னரே, சரீரப்பிணை வழங்கப்பட்டது.

இந்த எட்டு பேரின் தாக்குதலுக்கு உள்ளான எல்ல உல்லாசத் துறை தகவல் மத்திய நிலைய முகாமையாளர் இந்திக்க செனவிரட்ன, பதுளை அரசினர் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.