மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் – அமைச்சர் பி.ஹரிசன்

மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் – அமைச்சர் பி.ஹரிசன்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவர்களது பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் எனவும் அதற்கு மீனவ சமுகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்பாசன மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அழைப்பின் பேரில் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக வருகை தந்த அமைச்சர், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் உரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த பிரதேசத்தில் கடற்றொழில் செய்யும் மீனவ சமுகம் ஆழ்கடலுக்கு செல்லும் போது அங்கிருந்து கரையில் உள்ள குடும்ப உறவினர்கள் மற்றும் படகு உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்வதற்கு உரிய வசதிகளை மேற்கொள்ள வேண்டும் அதற்கான தொலைத்தொடர்பாடல் கருவிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக பணம் செலவழித்து படகுகளை கொள்முதல் செய்யும் படகு உரிமையாளர்கள் சிறு தொகையினை செலுத்தி அக்கருவியினை கொள்வணவு செய்வதற்கு தயங்குவது ஏன் என்று தெரியாது அதனை கொள்வணவு செய்வதற்கு வங்கிகளுக்கூடாக குறைந்த வட்டியில் கடன் பெறுவதற்கு அமைச்சினுடாக உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் அமைக்கப்பட்டுள்ள கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஆழ்கடல் கடற்றொழில் அலகு காரியாலயமும் அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்ந நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்ஸான் குறூஸ், வாழைச்சேனை மீன் பிடி துறைமுக முகாமையாளர் ஜி.ஆர்.விஜிதன், அமைச்சின் அதிகாரிகள், மீனவ சங்கங்களின் பிரதி நிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.