இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைக்க பேச்சுவார்த்தை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்து கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் மாலைதீவு சபாநாயகர் முஹம்மட் நசீட்டுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று(09) மாலைதீவு பாராளுமன்றத்தில் நடைபெற்றது.

சார்க் உயர்கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அங்கு பல்வேறு உயர்மட்ட கலந்துரையாடல்களில் கலந்துகொண்டார்.

அதனையடுத்து இன்று(09) மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான முஹம்மட் நசீட்டும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடலொன்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இலங்கை – மாலைதீவு பாராளுமன்றங்களை ஒருங்கிணைத்து செயற்படுவதன் மூலம் ஆலோசனை மற்றும் பங்களிப்பை பகிர்ந்து கொள்வது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் மாலைதீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது, இரு நாடுகளின் பாராளுமன்றங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டது. இதற்கென அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் குழுவொன்றும் அமைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.