இளம் வீரர்களை கண்டு பயப்படும் மூத்த வீரர்கள்

இளம் வீரர்களை கண்டு பயப்படும் மூத்த வீரர்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் நேற்று(09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.

இளம் வீரர்கள் இவ்வாறான சாதனையை படைத்துள்ளமையை அடுத்து, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாரிய சவால்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியானது பாகிஸ்தானுக்கான தனது சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டுள்ளது.

இலங்கை முன்னணி வீரர்கள் இன்றி இளம் வீரர்கள் படைத்த இந்த சாதனை வரவேற்கக்கூடிய விடயம் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் போட்டி மத்தியஸ்தர் நல்லையா தேவராஜன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இனிவரும் காலங்களில் மூத்த வீரர்களும், இளம் வீரர்களை கண்டு அஞ்சுவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகவும், உலகக் கிண்ண போட்டிகளுக்கு இவ்வாறான வீரர்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில், இலங்கை அணி வெற்றியீட்டியிருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும் நல்லையா தேவராஜன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணித் தலைவர் திமுத் கருணாரத்ன, வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க உள்ளிட்ட 10 வீரர்கள் பாகிஸ்தான் பயணத்தை புறக்கணித்தனர்.

பாகிஸ்தான் மண்ணில் வைத்தே பாகிஸ்தானுக்கு எதிரான இருபதுக்கு இருபது கிரிக்கெட் தொடரொன்றை வெற்றி கொண்ட அணியாக இலங்கை அணி வரலாற்றில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.