வாய்ப்பை இழந்த சிரேஷ்ட வீரர்கள்; இருபதுக்கு -20 கிரிக்கெட்டில் தனியொர் அணியை உருவாக்க திட்டம்

வாய்ப்பை இழந்த சிரேஷ்ட வீரர்கள்; இருபதுக்கு -20 கிரிக்கெட்டில் தனியொர் அணியை உருவாக்க திட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் தரவரிசையில் முதல் நிலை அணியான பாகிஸ்தானை மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முழுமையாக (3-0) வெற்றிகொண்டு தமது திறமையை உலகிற்கு பறை சாட்டியுள்ளனர்.

இதனால் உலக கிரிக்கெட் அரங்கில் முன்னணியில் உள்ள அணிகள் கூட இலங்கை அணியை திரும்பிபார்க்க ஆரம்பித்துள்ளது.

இதற்கு காரணம் தங்களது அற்புத ஆற்றல்களால் தேசத்துக்கு புகழும் பெருமையும் ஈட்டிக்கொடுத்த இளம் இலங்கை கிரிக்கெட் வீரர் என்றால் யாரும் மறுக்க மாட்டார்கள்.

தேசத்துக்கு புகழும் பெருமையும் ஈட்டிக்கொடுத்த இளம் வீரர்களுக்கு மொத்தமாக 145,000 அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.

இதில் இருபது 20 கிரிக்கெட்டில் ஈட்டிய ஒவ்வொரு வெற்றிக்கும் தலா 15,000 அமெரிக்க டொலர்கள் ஊக்குவிப்புத் தொகை அடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வெகுமானத்தை வென்ற இருபது 20 கிரிக்கெட் வீரர்களில் பலர் இலங்கை அணியில் தமது இருப்பை உறுதிசெய்வதற்கான வாயிலைத் திறந்துகொண்டதுடன் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி பாகிஸ்தான் செல்ல மறுத்த பத்து வீரர்களின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளனர்.

தசுன் ஷானக்க தலைமையிலான அணியில் இடம்பெற்று அபரிமிதமாகப் பிரகாசித்த வீரர்களைக் கொண்டு புறம்பான இருபது 20 இலங்கை அணியை அமைக்கும் திட்டம் உள்ளதா என தெரிவுக் குழுத் தலைவர் அஷன்த டி மெல்லிடம் பிரத்தியேகமாகக் கேட்டபோது, அது குறித்து ஆழமாக சிந்தித்து வருகின்றோம் என பதிலளித்தார்.

மேலும் ஊடக்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “இத்தகைய ஆற்றல்களும் அர்ப்பணிப்புத் தன்மை நிறைந்தவர்களும் இதற்கு முன்னர் இலங்கை அணிக்குள் ஈர்க்கப்படாதது ஏன் என்பது எனக்கு புரியவில்லை. நான் கடந்த ஒரு வருடமாகத்தான் தெரிவுக் குழுவில் இடம்பெறுகின்றேன். சிரேஷ்ட வீரர்கள் பத்து பேர் பாகிஸ்தான் செல்ல மறுத்ததாலேயே இவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை பற்றிப்பிடித்துக்கொண்டார்கள். அவுஸ்திரேலியாவுக்கான இருபது 20 கிரிக்கெட் சுற்றுப் பயணத்துக்கு இந்த வீரர்களுடன் மூன்று சிரேஷ்ட வீரர்களை இணைக்க எண்ணியுள்ளோம். மேலும் இருபது 20 வகை கிரிக்கெட்டுக்கு என தனியான ஓர் அணியை உருவாக்குவது குறித்தும் ஆழமாக சிந்தித்து வருகின்றோம்” என அஷன்த டி மெல் தெரிவித்தார்.