இறுக்கமாக நகரும் தேர்தல் களம் – கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்

இறுக்கமாக நகரும் தேர்தல் களம் – கோட்டைகளைச் சாய்ப்போருக்கே வெற்றி சாத்தியம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேசமே எதிர்பார்க்கின்ற எமது நாட்டின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் இன்னும் சில தினங்களில் வெளிவரும்.தேர்தலுக்கு ஓரிரு தினங்கள் இருக்கும் நிலையிலும் வெற்றி எவரின் பக்கம் என்பதைக் கூறமுடியாதளவு களங்கள் இறுக்கமாக நகர்கின்றன.இனவாதத்தை ராஜபக்ஷக்களும் சமூக சமவாதங்களை பிரேமதாஸக்களும் முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கும் பிரச்சாரங்களால் ராஜபக்ஷக்களுக்கு தென்னிலங்கையும் பிரேமதாஸக்களுக்கு சிறுபான்மைத் தளங்களும் சாதகமாகவுள்ளன. நல்லாட்சி அரசின் நாலரை வருடக் கெடுபிடிகளை ஞாபகமூட்டி ரணிலின் அரசாங்கத்தைக் கேலி செய்யும் மஹிந்தராஜபக்ஷ,ஈஸ்டர் தாக்குதலை கையிலெடுத்திருப்பது தென்னிலங்கையில் பல வியூகங்களை இழையோட வைத்துள்ளன.

ஜனநாயக தேசிய முன்னணியின் தோழமைக் கட்சிகளை பிரிவினைவாதமாகக் காட்டி தென்னிலங்கை முஸ்லிம்களை அச்சுறுத்துவது,பெளத்தர்கள் அதிகளவு விரும்பும் தலைமைக்கு எதிராகச் செயற்படாமல் நெருக்குவாரங்களைக் கட்டவிழ்ப்பது,கடும்போக்கர்களின் கண்காணிப்பில் ராஜபக்ஷக்களின் கோட்டைகளை சுற்றிவைளைப்பதும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கை கொடுத்துள்ளதையே காணமுடிகிறது . இந்தக் கள நகர்வுகள் ஜனநாயக தேசிய முன்னணிக்கு பெரும் தலையிடியாகிறது.

இவ்வினவாத வியூகங்களுக்குச் சமனான வாக்குகளைப் பெற்றேயாக வேண்டுமென்ற நிர்ப்பந்தம் சிறுபான்மையினரின் தளங்களைக் கையகப்படுத்துவதன் தீவிரத்தை ஐக்கிய தேசிய கட்சிக்கு ஏற்படுத்திற்று.இதனால் தமிழ் முஸ்லிம் தலைமைகள் ராஜபக்ஷக்களின் ஒரு தசாப்த ஆட்சியை,தங்களது தளங்களில் நினைவூட்டி,அவர்களைக் கொடுங்கோலர்களாகவும் கொடுமையாளர்களாகவும் காட்டி இவர்களின் செயற்படு தளங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

தெற்கு,வடக்குத் தளங்களின் எழுச்சிகளை அலையும் வாக்காளர்கள் (floating) புரிவதைப் பொறுத்தே வெற்றி,தோல்விகள் அமையலாம்.உண்மையில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் அங்குள்ள சுமார் 18 இலட்சம் வாக்குகளும் தென்னிலங்கையிலுள்ள பெரிய மாவட்டங்கள் ஒன்றுடன் சமப்படக் கூடியதே.உதாரணமாக கொழும்பு அல்லது குருநாகல் மாவட்டங்கள் ஒன்றுக்குச் சமனான வாக்குகளே அவை.எனவே சிறுபான்மைக் கோட்டைகளை மட்டுமன்றி தென்னிலங்கையிலுள்ள தமிழ் முஸ்லிம் வாக்குகளை அதிகப்படியாகப் பெறும் தேவை இத்தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

மேலும் தென்னிலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் முஸ்லிம் தனித்துவ தலைமைகளுடனும் இல்லை.இங்குள்ளோரில் பலர் ஐக்கிய தேசியக் கட்சியின் அபிமானிகள். இவர்கள் முஸ்லிம் தலைமைகள் கோரும் நிர்வாக அலகு,அதிகார எல்லைகளைப் பிரிவினையாகப் பார்ப்பவர்கள்.தனித்துவத் தலைமைகளை ஆதரிப்பது தென்னிலங்கைச் சிங்களவர்கள் மத்தியில் தங்கள் மீதான தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துமென அதிகளவு அஞ்சும் மக்களும் இவர்கள்தான் .

மேலும் ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னர் எழுந்த கொதி நிலைகள் இந்நிலைமைகளின் விபரீதங்களை இரட்டிப்பாக்கியுமுள்ளது. எனவே எவ்விதக் கோரிக்கைகளையும் முன்வைக்காது அல்லது தாம் வைத்த கோரிக்கைகளை வெளிப்படுத்தாதுள்ள முஸ்லிம் தனித்துவ தலைமைகளின் ராஜதந்திரத்தில் இம்மக்களின் பீதியைப் போக்குவதற்கான தந்திரங்கள் உள்ளதாகவும் எண்ணத் தோன்றுகிறது. ஏன்? 13 அம்சக் கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்துள்ளதே! இவர்களுக்கு மட்டும் ஏனிந்த ராஜதந்திரம் என்றும் சிலர் கோருகின்றனர்.இதுதான் சிந்திக்கத் தூண்டும் விடயம் தென்னிலங்கையில் தமிழர்களை விடவும் முஸ்லிம்களே அதிகம். இதுமட்டுமல்ல ஈஸ்டர் தாக்குதலின் எதிரொலிகளை ராஜபக்ஷக்கள் தென்னிலங்கையிலே மூலதனமாக்க முயற்சிக்கின்றனர்.

இம்முயற்சிகளைத் தவிர்க்கவே முஸ்லிம் தலைமைகள் இவ்வியூகத்தைக் கையாண்டிருக்கலாம். மேலும் புலிகள் ஒழிக்கப்பட்டுள்ளதால் தமிழர் தரப்பிலிருந்தான அச்சுறுத்தல்களை தென்னிலங்கை கடும்போக்கர்கள் கண்டு கொள்ளவில்லை.இருந்த போதும் புலிகளை உயிரூட்டுவதற்கான முயற்சிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்சக் கோரிக்கைகள் நோக்க வைக்கப்படுவதையும் சிறுபான்மையினர் அவதானிக்க வேண்டும் .”முப்பது வருடப் போரில் புலிகளால் செய்ய முடியாததையா கூட்டமைப்பினர் சாதிக்கப் போகின்றனர். தமிழர்களே அபிவிருத்தி அரசியலுக்காக தம்மோடு இணையுங்கள்”என ராஜபக்ஷக்கள் அழைப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தளங்களைத் தகர்க்கும் முயற்சிகள்தான்.எனினும் இவைகள் பாறைகளில் எறியப்பட்ட பந்துகளாகுமா?அல்லது பசுமரத்தாணிகளாகுமா?எதிரே வரவுள்ள நாட்களே இதற்கு விடை பகரவுள்ளன.உண்மையில் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடாத்திய எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை.உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 49 இலட்சம் வாக்குகளைப் பெற்று உஷாரடைந்த ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கைத் தளங்களை மேலும் கெட்டியாக்கின.

இதனால் ராஜபக்ஷக்களின் குடும்பத் தகராறுகளை தென்னிலங்கைச் சந்திகளுக்கு கொண்டு வருவதைத் தவிர வேறு வழிகள் புதிய ஜனநாய முன்னணிக்கு இருக்கவில்லை. குடும்ப ஆட்சி,ஊழல் மோசடிகள்,வாரிசு அரசியலைப் பிரச்சாரம் செய்யும் புதிய ஜனநாய முன்னணி தென்னிலங்கையில் அதிகளவு வாக்குகளைப் பெறுவதும் சிறுபான்மையினர் தளத்திற்குள் நுழைந்துள்ள மஹிந்தவின் ஏஜெண்டுகளை முற்றாகக் களைவதும்தான் சஜித்தின் வெற்றியைச் சாதகமாக்கலாம்.

இல்லாவிட்டால் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பெற்ற 36 இலட்சம் வாக்குகளுடன் தோழமைக் கட்சிகளால் கிடைக்கும் வாக்குகளைக் கூட்டுவதுடன் நின்று விட நேரிடும்.எனவே ஒட்டு மொத்தமாக இரு அணிகளும் வடக்கு, தெற்கு தளங்களைத் தகர்க்கும் வீதாசாரத்திலே வெற்றிகள் அமைந்திருக்கும்.சந்திரிக்காவின் வருகை ஐக்கிய தேசியக் கட்சியினரை விடவும் அதிலுள்ள சிறுபான்மைக் கட்சிகளை உற்சாகப்படுத்தியுள்ளதை அவதானிக்கும்போது,வீரியமுள்ள தலைவி கிடைத்ததற்கான மகிழ்ச்சி என்பதை விடவும் வெளிநாடுகளின் ஆதரவுகளைப் பெறலாமென்ற நம்பிக்கையே அவர்களைத் தைரியப்படுத்தியுள்ளன.

மறு பக்கம் வெளிநாடுகளின் தலையீடுகள்,டயஸ்பொராக்களின் அழுத்தங்களுக்கு எதிராகப் பேசும் ராஜபக்ஷக்களை இது தைரியமூட்டியுமுள்ளது. எனவே இத்தேர்தலென்பது எவரும் கணிப்பிட முடியாத,எதிர்வு கூற இயலாத மிக இறுக்கமான தேர்தலாகவேயுள்ளது. வெளிவரவுள்ள முடிவுகளே சகலரது எதிர்பார்ப்புக்கும் பதிலளிக்கும்.

-சுஐப் . எம். காசிம்-