கைப்பேசி பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வது கட்டாயம்

கைப்பேசி பயன்படுத்த முகத்தை ஸ்கேன் செய்வது கட்டாயம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சீனாவில் புதிய கைப்பேசி சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்கின்றவர்கள் தங்களின் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்படுகிறதாக சீனா அரசு தெரிவித்துள்ளது.

இணையவெளியில் சஞ்சரிக்கும் குடிமக்களின் சட்டபூர்வ உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க விரும்புவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சீன அரசு தெரிவித்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த புதிய விதிமுறை நேற்று முதல் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய கைபேசி சேவை அல்லது புதிய தரவுகளை பதிவிறக்கும் வசதியை பெற மக்கள் முயலும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டையை வழங்க வேண்டும். அவர்கள் புகைப்படமும் எடுக்கப்படுகிறார்கள்.

ஆனால், மக்கள் வழங்குகின்ற அடையாள அட்டையோடு, அவர்களது அடையாளங்கள் ஒத்து போகின்றனவா என்பதை பார்க்க அவர்களின் முகம் இப்போது ஸ்கேன் செய்யப்படும்.

சீனாவின் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் உருவாக்கியுள்ள தொலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய புதிய விதிகள், செல்பேசி சேவையை பயன்படுத்துகிறவர்களை கண்டறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த விதி அமலாக்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டபோது, சீன ஊடகங்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இத்தகைய நடவடிக்கை தீவிர கண்காணிப்பை வலுப்படுத்தும் என்று மக்கள் பலரும் சமூக ஊடகங்களில் கவலை தெரிவித்திருந்தனர்.