இலங்கைக்கு 36 தங்கப்பதக்கம்; கடற்கரை கரப்பந்தில் புதிய சாதனை

இலங்கைக்கு 36 தங்கப்பதக்கம்; கடற்கரை கரப்பந்தில் புதிய சாதனை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கடற்கரை கரப்பந்தாட்ட அணிகள் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.

இதில் பொகாரா நகரில் நடைபெற்ற கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் இலங்கைக்கு முக்கியமாக இருந்தது.

இதில் ஆடவர் மற்றும் மகளிர் இரு பிரிவுகளிலும் இறுதிப் போட்டியில் இலங்கை அணிகளே ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இலங்கைக்கு இரு தங்கம், இரு வெள்ளிப் பதக்கங்கள் உறுதியாக இருந்த இந்தப் போட்டிகளில் ஆடவருக்கான கடற்கரை கரப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை 1 அணி மற்றும் இலங்கை 2 அணி மோதிக் கொண்டன.

இதில் இந்திக்க டிரோன் மற்றும் சனூஜ அணியை தோற்கடித்து அசங்க பிரதீப் மற்றும் அசேன் குமாரா ஆகிய வீரர்களைக் கொண்ட இலங்கை 1 அணி தங்கப் பதக்கம் வென்றது.

அதேபோன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை 1 அணியில் தாருக்கா லக்சினி மற்றும் தினேஷ் பிரசாதினி இலங்கை 2 அணியான தீபிக்கா மற்றும் மதுசானி வீரசிங்க போட்டியிட்டனர்.

இலங்கை இதுவரை 36 தங்கப்பதக்கங்களை வென்றுள்ளது.

அதேநேரம் 69 வெள்ளி மற்றும் 93 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 198 பதக்கங்களுடன் தரப்பட்டியலில் இலங்கை மூன்றாம் இடத்தில் உள்ளது.

குறித்த போட்டியில் இந்தியா 135 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 255 பதக்கங்களை பெற்று முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

இரண்டாம் இடத்தில் உள்ள நேபாளம் இதுவரை 45 தங்கம், 45 வெள்ளி, 76 வெண்கல பதக்கங்கள் அடங்கலாக 176 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

நான்காம் இடத்தில் உள்ள பாகிஸ்தான் 29 தங்கம், 34 வெள்ளி, 47 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக 110 பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.