சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறியுள்ள அரசாங்கம் – ஜீ.எல். பீரிஸ்

தற்போதைய அரசாங்கம் சர்வதேச சக்திகளின் பொம்மையாக மாறிப் போயிருப்பதாக அரசியலமைப்பு தொடர்பான சிரேஷ்ட பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியரும், சர்வதேச அளவில் விருதுகள் பல பெற்றுள்ளவருமான ஜீ.எல். பீரிஸ் இது தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் பிரச்சார காலம் தொட்டே அரசியலமைப்புக்கு முரணாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்தில் அவர் தான் ஜனாதிபதியானவுடன் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கப் போவதாக உறுதியளித்திருந்தார். அது அரசியலமைப்பு விதிகளை அப்பட்டமாக மீறுவதாகும்.

அத்துடன் மைத்திரிபால ஜனாதிபதியானவுடன் பதவியில் இருந்த பிரதமரை விலக்கி விட்டு புதிதாக ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார். அரசியலமைப்பு விதிகளின்படி ஜனாதிபதி அவ்வாறு செயற்பட முடியாது. பதவியில் இருக்கும் பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது. ஆனால் யாரும் இது தொடர்பாக நீதிமன்றம் சென்று ஜனாதிபதியின் தீர்மானத்தை கேள்விக்குட்படுத்தவில்லை.

மேலும், அதே போன்று கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் கடைசிக்கட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக கடிதம் ஒன்றை அனுப்பியமை, கட்சியின் செயலாளர்களை பதவி நீக்கம் செய்தமை என்பவற்றின் மூலம் அவர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சார்பாக கொண்டார். இதற்காக ஜனாதிபதி செயலகம் பயன்படுத்தப்பட்டது. இதுவும் அரசியலமைப்பு விதிகளுக்கு முரணானது.

தற்போது இவர்கள் போர்க்குற்றங்கள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகளுக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர். இது ஒரு சர்வதேச சதியாகும். இதனை வைத்துப் பார்க்கும் போது இந்த அரசாங்கம் சர்வதேச சதிவலைக்குள் சிக்குண்டுள்ளதா என்ற சந்தேகம் நம்முள் எழுகின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு இன அடிப்படையில் கோட்டாக்களை அறிமுகப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடக்கம் அரசாங்கத்தின் தொழில்வாய்ப்புகள் வரை அனைத்திலும் அதனைக் கடைப்பிடித்தாலே போதுமானது என்றும் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேலும் தெரிவித்திருந்தார்.

(riz)