ரஷ்யாவின் ‘Secret’ விஷத்தினை கக்குமா நாவல்னி

ரஷ்யாவின் ‘Secret’ விஷத்தினை கக்குமா நாவல்னி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சர்வதேச அளவில் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க ஜெர்மனி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய நாடுகள் உடன் ஜெர்மனி தற்போது ஆலோசனை நடத்தி வருவதாக சர்வதேச செய்திகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

ரஷ்யாவில் விஷம் கொடுக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் நாவல்னி தற்போது ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தற்போது ரஷ்யா – ஜெர்மனி என்ற இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டையாக உருவெடுத்துள்ளது எனலாம்.

ரஷ்யாவில் எதிர்க்கட்சிகளின் முகமாக பார்க்கப்படும் நாவல்னி அங்கு விமான பயணம் ஒன்றில் மயங்கி விழுந்து, கோமாவிற்கு சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. சில நாட்கள் முன் செர்பியாவில் இருந்து மொஸ்கோவிற்கு விமானத்தில் வந்தவர், விமானத்திலேயே மூச்சு விட முடியாமல் திணறி, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

இவருக்கு என்ன ஆனது, ஏன் இப்படி திடீரென கோமாவிற்கு சென்றார் என்பது புதிராக இருந்தது. இவரின் ஆரோக்கியம் தொடர்பாக வெவ்வேறு விதமான கருத்துக்கள் நிலவி வருகிறது. செர்பியாவில் சிகிச்சை பெற்று வந்த இவர் தன்னை புட்டின் கொல்ல முயற்சி செய்கிறார் என தெரிவித்திருந்தார். அதோடு சைபீரியாவில் தனக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குறிப்பிட்டார். இதனால் இவர் உடனே ஜெர்மனிக்கு இடமாற்றப்பட்டார்.

இவர் ஜெர்மனிக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நாளில் இருந்தே ஜெர்மனி – ரஷ்யா இடையே மோதல் நிலவி வருகிறது. முதலில், ரஷ்யா நாவல்னிக்கு விஷம் கொடுத்து இருக்கலாம் என ஜெர்மனி வெளிப்படையாக அறிவித்தது. சைபீரிய மருத்துவர்கள் இந்த விஷம் குறித்த புகாரை மறுத்தனர். ஆனாலும் கூட நாவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டு இருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஜெர்மனி குறிப்பிட்டது.

இந்நிலையில்தான் நாவல்னி உடலை சோதனை செய்ததில், அவரின் உடலில் விஷம் கலக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நாவல்னி உடலில் நோவிசாக் (Novichok) என்ற விஷம் கலந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விஷம் ரஷ்யாவின் சீக்ரெட் விஷம் ஆகும். ரஷ்யா மூலம் உருவாக்கப்பட்ட இந்த விஷம் உலகம் முழுக்க தடை செய்யப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் அதிக அளவில் இந்த விஷம் இருக்கிறது.

நாவல்னிக்கு கொடுக்கப்பட்ட இந்த விஷம் ரஷ்யாவிடம் மட்டுமே இருக்கிறது என்று ஜெர்மனி கூறியுள்ளது. இதுதான் தற்போது ரஷ்யா – ஜெர்மனி இடையிலான சண்டைக்கு காரணம். நாவல்னிக்கு விஷம் கொடுத்தது ஏன் என்று ரஷ்யா விளக்க வேண்டும். அதுவும் தடை செய்யப்பட்ட நோவிசாக் விஷம் எப்படி நாவல்னி உடலில் வந்தது என்று விளக்க வேண்டும் என்று ஜெர்மனி கேட்டுள்ளது.

ஒருவேளை ரஷ்யா சரியான விளக்கத்தை கொடுக்கவில்லை என்றால் புட்டின் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். ஐரோப்பிய நாடுகளின் எதிர்ப்பை ரஷ்யா சந்திக்க வேண்டி இருக்கும். புட்டின் இதை விளக்க வேண்டும். இல்லையென்றால் ஐரோப்பா நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார, இராணுவ தடைகளை விதிக்க நேரிடும் என்று ஜெர்மனி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜெர்மனிதான் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கு தலைமை வகிக்கிறது.

இதனால் ஜெர்மனி சொன்னால் ஐரோப்பிய நாடுகள் கேட்க வாய்ப்புள்ளது. அதோடு ஜெர்மனி ஐரோப்பிய நாடுகள் உடன் இதற்காக ஆலோசனையும் செய்து வருகிறது. விரைவில் ரஷ்யாவிற்கு எதிராக ஜெர்மனி முக்கிய அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் ரஷ்யாவில் நாவல்னி மூலம் அரசியல் புரட்சியை செய்யவும் ஜெர்மனி முயன்று வருகிறது. இன்னொரு பக்கம் ஜெர்மனி இதில் இரட்டை வேடம் போடுவதாக ரஷ்யா கூறியுள்ளது.

அதன்படி ஜெர்மனி இதில் பொய் சொல்கிறது. விஷம் தொடர்பாக ரஷ்யா மீது ஜெர்மனி வைக்கும் புகார்களை ஏற்க முடியாது. இந்த சோதனை தொடர்பான விவரங்களை ஜெர்மனியிடம் நாங்கள் கேட்டோம். முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெர்மனியிடம் நாங்கள் சோதனை விவரங்களை கேட்டோம். ஆனால் ஜெர்மனி வேண்டும் என்று அதை தர மறுக்கிறது.. உண்மை வெளி வர கூடாது என்று ஜெர்மனி நாடகம் போடுகிறது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸே நவால்னி, கோமா நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

44 வயதாகும் ரஷ்ய எதிர்கட்சித் தலைவர் நவால்னி, நோவிசோக் எனப்பபடும் நரம்பு மண்டலத்தை தாக்கக்கூடிய இரசாயன தாக்குதலுக்கு ஆளானதாக ஜெர்மன் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோமா நிலையில் இருந்த அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.