பெல்ஜியத்தின் ப்ருசெல்ஸ் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பெல்ஜியத்தின் ப்ருசெல்ஸ் நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் |  பெல்ஜியம்) – பெல்ஜியத்தின் ப்ருசெல்ஸ் (Brussels) நகரில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ப்ருசெல்ஸ் நகரில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் வைத்திருந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் அண்மையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையிலேயே, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது, கார்கள் மற்றும் பல்வேறு உடைமைகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, கல்வீச்சுத் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகள் சிலர் காயமடைந்துள்ளதோடு, பல ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பெல்ஜியத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில், 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த இளைஞர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், சுகயீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், குறித்த காரணத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்தும், இதற்கு நீதி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் பொது மக்களினால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.