முதல் ஊடக சந்திப்பு : சுமார் 50 நிமிடங்கள்

முதல் ஊடக சந்திப்பு : சுமார் 50 நிமிடங்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் |  அமெரிக்கா) – அமெரிக்க ஜனாதிபதியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடன் நிர்வாகத்தின் ஊடகச் செயலாளராக ஜென் சாகி என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

வெள்ளை மாளிகையில் நடந்த முதல் பத்திரிகையாளர் சந்திப்பு சுமார் 50 நிமிடங்கள் இடம்பெற்று இருந்தது.

இதன்போது ஜென் சாகி கருத்துத் தெரிவிக்கையில்;

“அமெரிக்க மக்களின் நம்பிக்கையை வளர்த்தெடுப்பதுதான் பைடன் நிர்வாகத்தின் முக்கிய நோக்கமாக இருக்கும்” என்றார் ஜென் சாகி.

“என்னை இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி பைடன் என்னிடம் கேட்ட போது, பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உண்மையையும், வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருவது எவ்வளவு முக்கியமானது என விவாதித்தோம்” என்றார் ஜென் சாகி.

அவர் பேசி முடித்த பிறகு, பத்திரிகையாளர்களுக்கான கேள்வி நேரம் தொடங்கியது.

நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்? அதிபர் ஜோ பைடன் மதிப்பை உயர்த்துவதற்கா? அல்லது வெளிப்படையாக உண்மையை பகிர்வதற்கா? என அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை சார்பில் முதல் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஜென் சாகி,

“சுதந்திரமான பத்திரிகைகளின் பங்களிப்பு மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. நாம் இருவரும் முரண்படும் நேரங்கள் வரலாம், ஆனால் நம் இருதரப்புக்கும், அமெரிக்க மக்களிடம் துல்லியமான உண்மையைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற ஒரு பொது நோக்கம் இருக்கிறது” என்றார்.

அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும், உண்மையையும் கொண்டு வர தானும் அதிபர் பைடனுடன் பணியாற்றப்போவதாக குறிப்பிட்டார் ஜென்.