மலேசியா நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

மலேசியா நாடாளுமன்றை கூட்டுமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் |  மலேசியா) – மலேசியாவில் நாடாளுமன்றை மீளக் கூட்டுமாறு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ அன்வர் இப்ராஹிம் (Datuk Anwar Ibrahim) கோரிக்கை விடுத்துள்ளார்.

நம்பிக்கை கூட்டணி மற்றும் ஆளும் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து அவசரகாலச் சட்டத்தை நீக்குமாறு கடிதம் மூலம் மலேசிய பேரரசரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் முயாதீன் யாசீன் பேரரசரை பிழையாக வழிநடத்தியுள்ளதாக பீ.கே.ஆர் கட்சியின் தலைவர் அன்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழந்துள்ள பிரதமர், பதவி மோகத்தினால் இவ்வாறு பேரரசரை பிழையாக வழிநடாத்தி ஆட்சியில் நீடித்துக் கொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றை மீளவும் கூட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனவும் இந்த கோரிக்கை கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேரரசருக்கு எதிராக போராட்டங்களை நடாத்தவில்லை எனவும் அவசரகாலச் சட்டம் குறித்த தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுப்பதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகாலச் சட்டம் தொடர்பில் பிரதமர் கூறியுள்ள நியாப்படுத்தல்கள் அடிப்படையற்றவை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொவிட்-19 நோய்த் தொற்று நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் அவசரகால நிலையை நீடித்து வருவதாக பிரதமர் யாசீன் கூறியுள்ளார்.

எனினும், அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிரான விமர்சனங்களை முடக்கவும், ஆட்சியில் தொடர்ந்தும் நீடித்துக் கொள்ளவும் பிரதமர் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும், கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.