புதிய வைரஸினால் நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்

புதிய வைரஸினால் நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம்

(ஃபாஸ்ட் நியூஸ் | பிரித்தானியா) – பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய வடிவு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய வடிவுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸின் புதிய வடிவு மற்றும் பழைய வடிவுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இறப்பு எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்து கணிதவியலாளர்கள், இந்தத் தரவுகளை திரட்டியுள்ளனர்.

வேகமாக பரவக் கூடிய கொரோனா வைரஸின் புதிய வடிவு, ஏற்கனவே பிரிட்டன் முழுக்க பரவியுள்ளது.

“இந்த புதிய வடிவு, (லண்டன் & தென் கிழக்கு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட வடிவு) அதிவேகமாக பரவுவதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பலி எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யலாம் எனவும் சில ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகத் தோன்றுகிறது” என்றார் பிரதமர் ஜான்சன்.

கொரோனா வைரஸின் இந்த புதிய வடிவு, எந்தளவுக்கு ஆபத்தானது, எத்தனை பேரை பலி வாங்குகிறது என்பதைக் கண்டுபிடிக்க, இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு, இம்பீரியல் காலேஜ் ஆஃப் லண்டன், தி லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன், டிராபிகல் மெடிசின், எக்ஸ்டர் பல்கலைக்கழகம் என பல அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் மதிப்பீடு செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றன.

இது தொடர்பான ஆதாரங்களை கொண்டு பிரிட்டனின் நியூ அண்ட் எமர்ஜிங் ரெஸ்பிரேடரி வைரஸ் த்ரெட்ஸ் அட்வைசரி குரூப் (Nervtag) என்றழைக்கப்படும் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்து வருகிறார்கள்.