கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் தாயகத்திற்கு

கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் தாயகத்திற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்தியாவினால் வழங்கப்படும் கொவிட் தடுப்பூசிகள் இன்று முற்பகல் 11 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராசெனெகா கொவிசீல்ட் தடுப்பூசிகள் எயார் இந்தியா விமான சேவையில் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

இந்தியாவினால், 5 லட்சம் தடுப்பூசிகள், இலங்கைக்கு வழங்கப்படுகின்றன.

அவற்றில் ஒருவருக்கு இரண்டு தடவைகள் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளமையினால், 2 லட்சத்து 50 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஆலோசகரும், கொவிட் தடுப்பூசி தொடர்பான விடயங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரியுமான லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதற்கான முதன்மைக் குழுக்களாக சுகாதாரத் தரப்பினருக்கும், முப்படை மற்றும் காவற்துறையினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், மூன்றாவது குழுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், நாட்பட்ட மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு, இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.

எவ்வாறாயினும் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுமாறு எவரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க அறிவித்துள்ளார்.