வீரர்களது ஆற்றல்களுக்கு ஏற்ப கொடுப்பனவு

வீரர்களது ஆற்றல்களுக்கு ஏற்ப கொடுப்பனவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைப்பது உள்ளிட்ட 5 முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டில் கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவற்காக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று சந்தித்திருந்தார்.

குறித்த சந்திப்பில் தேசிய விளையாட்டு பேரவையின் தலைவர் மஹேல ஜயவர்தனவும் கலந்து கொண்டிருந்தார்.

இதற்கமைய, புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை அமைத்தல், உள்ளூர் மற்றும் மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளை முன்னெடுத்தல், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் உடற்தகுதிக்கு முன்னுரிமை வழங்குதல், வீரர்களின் செயற்றிறனை மையமாக வைத்து ஒப்பந்தங்களை மேற்கொள்ளல் மற்றும் கிரிக்கெட் அணி பயிற்றுவிப்பாளருக்கு உதவுவதற்காக பணிப்பாளர் மற்றும் வழிகாட்டி ஆகியோரை நியமித்தல் ஆகிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை, விளையாட்டு வீரர்கள் தமது ஆற்றலை வெளிப்படுத்தும் தன்மைக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்கும் திட்டமொன்று விளையாட்டுத்துறை அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோரை குறித்த கொடுப்பனவு திட்டத்தின் கீழான ஒப்பந்தமொன்றுக்குள் உள்வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒலிம்பிக், பரா ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் ஆகிய விளையாட்டு தொடர்களை மையமாக வைத்து இந்த திட்டம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.