ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் |மியன்மார்) – இறக்குமதி முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகியை 14 நாட்கள் காவலில் வைக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியன்மாரில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அந்நாட்டு இராணுவம் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம் சாட்டியதோடு, தேர்தல் முடிவுகளை ஏற்கவும் மறுத்தது. ஆனால் இராணுவத்தின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றவை என கூறி தேர்தல் ஆணையம் அதை நிராகரித்தது.

இந்த விவகாரத்தில் மியன்மார் அரசுக்கும் அந்த நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இராணுவம் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றியது. நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை இராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.

அடுத்த ஒரு வருடத்துக்கு நாட்டில் இராணுவ ஆட்சி நடைபெறும் என்றும் அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு வெற்றியாளரிடம் அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் இராணுவம் அறிவித்துள்ளது. மேலும் ஆங் சான் சூகி மீது இறக்குமதி முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தேசிய ஜனநாயகக் கட்சி செய்தித் தொடா்பாளா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“தனது பதவிக் காலத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி விதிமுறைகளை ஆங் சான் சூகி மீறியதாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை வரும் 15-ஆம் திகதி வரை 14 நாள் காவலில் வைத்திருக்க தகினாத்திரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தேசிய பேரிடா் மேலாண்மை சட்டத்தை மீறியதாக அதிபா் வின் மியின்ட் மீதும் முறைகேடு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங் சான் சூகியின் இல்லத்தில் சோதனை நடத்திய இராணுவக் குழு, அங்கிருந்து 10 ‘வாக்கி டாக்கி’ கருவிகளையும், வேறு சில தகவல் தொடா்பு சாதனங்களையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. அந்த சாதனங்களை உரிய அனுமதியின்றி ஆங் சாங் சூகி இறக்குமதி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி முறைகேடு வழக்கில் இதனை ஆதாரமாகப் பயன்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

COMMENTS

Wordpress (0)