அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்

அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயை வழங்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச் சம்பளமாக 900 ரூபாயையும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாயையும் சேர்த்து 1,000 ரூபாயை சம்பளமாக வழங்குவதற்கு, சம்பள நிர்ணயச் சபை தீர்மானித்துள்ளது.

சம்பள நிர்ணயச் சபையின் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில், 3 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 1,000 ரூபாயை அடிப்படைச் சம்பளமாக வழங்குவதுத் தொடர்பிலான பேச்சுவார்தை, சம்பள நிர்ணயச் சபையில் நேற்று(08) நடைபெற்றது.

தொழில் ஆணையாளர் தலைமையில், தொழில் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று 2.30 மணியளவில் ஆரம்பமான இப்பேச்சுவார்த்தை, 4.30 மணிவரை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கங்கள் சார்பாக எண்மரும் முதலாளிமார் சம்மேளனம் சார்பாக எண்மரும் அரசாங்கத்தின் தரப்பில் மூவரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது 900 ரூபாயை அடிப்படைச் சம்பளமாகவும் 100 ரூபாயை பாதீட்டுக் கொடுப்பனவாகவும் வழங்குவதற்கான முன்மொழிவை தொழிற்சங்கங்கள் முன்வைத்துள்ளன. இதனை சம்பள நிர்ணயச் சபை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

இதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணங்காமையால் இந்தத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டுள்ளது.

வாக்கெடுப்பில் தொழிற்சங்கள் சார்பாகக் கலந்துகொண்ட எண்மரும் சம்பள நிர்ணயச் சபையின் மூன்று உறுப்பினர்களும், ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

முதலாளிமார் சம்மேளனத்தின் எட்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில், 3 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பள நிர்ணயச் சபையின் இந்தத் தீர்மானம் தொழில் அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கக்கப்படவுள்ள நிலையில் வர்த்தமானியிலும் வெளியிடப்படவுள்ளது.

அதன் பின்னர் சம்பள நிர்ணயச் சபை இந்தத் தீர்மானத்தை மீண்டும் உறுதிபடுத்தப்படவுள்ளது.

மிக நீண்டகாலமாக இழுபறியில் இருந்த தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் சம்பள உயர்வுக்கு, சம்பள நிர்ணயச் சபையினூடாக சுமூகமானத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக, தொழிற்சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.