கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை

கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கழிவிலிருந்து மின் பிறப்பாக்கல் ஆலை கெரவலபிட்டிய பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மின்வலு அமைச்சர் டலஸ் அலஹப்பெரும, கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க மற்றும் இதர விருந்தினர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு நேற்று (17) இடம்பெற்றது.

அதிகரித்துச் செல்லும் திண்மக் கழிவு அகற்றல் தொடர்பான பிரச்சனை தொடர்பில் தீர்வு காண்பதற்கு சூழலுக்கு நட்பான மற்றும் நிலைபேறான பொறிமுறை ஒன்றை நிறுவுவதற்கு கொழும்பு மாநகர சபையினால் கேள்வி மனுக் கோரப்பட்டிருந்த நிலையில், எயிட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான த வெஸ்டர்ன் பவர் கம்பனி (பிரைவட்) லிமிடெட் இந்த விலை மனுக் கோரலை தன்வசப்படுத்தியிருந்தது.

மேலும், 20 வருட காலப்பகுதிக்கு கொழும்பு மாநகர சபையுடன் கழிவு விநியோக (WSA) உடன்படிக்கையில் த வெஸ்டர்ன் பவர் கம்பனி கைச்சாத்திட்டதுடன், இலங்கை மின்சார சபையுடன் நியமப்படுத்தப்பட்ட வலுக் கொள்வனவு (SPPA) உடன்படிக்கையில் 2017ஆம் ஆண்டில் கைச்சாத்திட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவிக்கையில், “திண்மக் கழிவு முகாமைத்துவம் என்பது கொழும்பு நகரில் நீண்ட காலமாக காணப்படும் பிரச்சனையாக அமைந்துள்ளது. கெரவலபிட்டிய கழிவிலிருந்து வலுப் பிறப்பிப்பு திட்டம் என்பது அந்தப் பிரச்சனையை தொடர்ச்சியாக தீர்ப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொழும்ப நகரில் மாத்திரமன்றி, முழு இலங்கைக்கும் கழிவு முகாமைத்துவ திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு கொழும்பு மாநகர சபை வழங்கியிருந்த பங்களிப்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் திட்டத்துக்கான நிதி உதவியை வழங்கியமைக்காக எயிட்கன் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்த வலுச் சக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.” எனத் தெரிவித்திருந்தார்.