புதிய பயணத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

புதிய பயணத்திற்கு ஜனாதிபதி அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்போதுள்ள கோவிட் -19 நிலைமைகளுக்கு மத்தியில் பொது மக்கள் பாதுகாப்புக்கு விதிக்கப்பட்டுள்ள சுகாதார கட்டுப்பாடுகளைத் தவிர சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளையும் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுலா துறை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இலக்காக இருப்பதால், சவால்களை வெற்றிகொண்டு இந்த தொழிற்துறையின் ஒரு புதிய பயணத்திற்கு தயாராகுங்கள் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுற்றுலா தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் முயற்சியாளர்களிடம் தெரிவித்தார்.

சுற்றுலாத் துறை அபிவிருத்தி குறித்து நேற்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார். இத்துறை சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களும், இந்தத் துறையில் உள்ள முன்னணி தொழில்முயற்சியாளர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

கொவிட் தடுப்பூசி வழங்குவதில் ஹோட்டல் ஊழியர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் ஓட்டுநர்கள் போன்ற ஊழியர்களுக்கும் முன்னுரிமை அளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் தொற்றுக்குள்ளாகாத போது, வசதிகளை வழங்குவோர் தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை என்று முன்மொழியப்பட்டது.

நோய்த்தொற்றுக்குள்ளான சுற்றுலாப் பயணிகளை லங்கா ஹொஸ்பிடல் மற்றும் கொக்கலவில் இலங்கை இராணுவத்தினால் நடத்தப்படும் மருத்துவமனைக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலாத் திட்டத்தின் படி சுற்றுலாப் பயணிகளை வழிநடத்துவதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

சுற்றுலாப் பயணிகளின் வசதிகள் குறித்தும் சுற்றுலா முடிவில் அவர்களின் கருத்துக்கள் குறித்தும் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அனைத்து நிவாரணங்களும் அரசாங்கத்திடமிருந்து கிடைத்திருப்பதால், முறையான திட்டமிடல் மூலம் எதிர்கால இலக்குகளை அடைய நடவடிக்கை எடுப்பதாக தொழில் முயற்சியாளர்கள் தெரிவித்தனர்.

கொவிட் காலத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளிடையே நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் வீதம் 1% க்கும் குறைவாக இருந்ததாக இதன் போது தெரிவிக்கப்பட்டது. கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதில் உலக தரவரிசையில் எமது நாடு 10 வது இடத்தில் இருக்கின்ற சாதகமான நிலைமையை சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த சவாலான காலகட்டத்தில் சுகாதாரத் துறையின் வழிகாட்டல்களை கருத்திற் கொண்டு சுற்றுலாத்துறையை மேம்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.