இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான அநீதி

இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான அநீதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை வாழ் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு பாரதூரமான அநீதி இழைக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது.

பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவிற்கு, சர்வதேச மன்னிப்புச் சபை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை கட்டாயம் தகனம் செய்யும் நடைமுறை குறித்து கடுமையான கரிசனை கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு முன்னதாக சடலங்களை தகனம் செய்யவும் அடக்கம் செய்யவும் அனுமதி வழங்கியிருந்த நிலையில் பின்னர் அடக்கம் செய்வது தடை செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியுள்ள பின்னணியில் இலங்கையில் பல்வேறு நிபுணர் குழுக்களை அமைத்து உடல்களை அடக்கம் செய்வது தடை செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமிய மத நம்பிக்கைகளின் பிரகாரம் உடல்களை தகனம் செய்யக் கூடாது என்ற நிலையில் பலவந்தமான அடிப்படையில் உடல்கள் தகனம் செய்வது அந்த சமூகத்தின் மத உரிமைகளை முடக்கும் செயற்பாடாகவே நோக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளது.

சடலங்களை அடக்கம் செய்யக்கூடாது ஏன் என்ற கேள்விக்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் நியாயபூர்வமான விளக்கங்கள் எதனையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளது.

பலவந்தமான அடிப்படையில் உடல்களை தகனம் செய்வது சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச சுகாதார விதிமுறைகளை பின்பற்றி அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுப்பதாக மேலும் குறிப்பிட்டுள்ளது.