சவுதி பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – கஷோகியின் காதலி

சவுதி பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும் – கஷோகியின் காதலி

(ஃபாஸ்ட் நியூஸ் |  இஸ்தாம்புல்) – ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென கஷோகியின் காதலி ஹேட்டீஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார்.‌

சவுதி அரேபியா அரசையும் அந்நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது.‌ ஆனால் சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த சூழலில் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என கூறி சவுதி அரேபியா மறுத்தது.

இந்தநிலையில் ஜமால் கஷோகி கொலையில் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென கஷோகியின் காதலி ஹேட்டீஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார்.‌ இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

‘‘.. குற்றமற்ற மற்றும் அப்பாவியான ஒருவரை கொடூரமாக கொலை செய்ய உத்தரவிட்ட பட்டத்து இளவரசர் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அவர் தண்டிக்கப்படாவிட்டால் அது என்றென்றும் நம் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நமது மனித குலத்துக்கு ஒரு கறையாக இருக்கும். இது நாம் தேடும் நீதியைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல் இது போன்ற செயல்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கவும் முடியும்..’’  என தெரிவித்துள்ளார்.

துருக்கியைச் சேர்ந்த ஹேட்டீஸ் செங்கிசை திருமணம் செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக இஸ்தான்புல்லில் தூதரகத்துக்கு சென்றபோதுதான் ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.