ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக பிரதான ஊடகங்கள் சமூக ஊடகங்கள் மூலமாகமே நாமும் தெரிந்து கொண்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்திருந்தார். 

இன்று(04) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இன்றும் பூரண அறிக்கை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை. அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரதி ஒன்றின் மூலமே நாங்களும் அறிந்து கொண்டோம்.

ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்படுவது தகவல் சேகரிப்பு சார்ந்த விடயங்களுக்கு மாத்திரமே, அதிகார பலம் ஆணைக்குழுவிற்கு இல்லை. சேகரித்த தகவல்களை ஆணைக்குழு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும். அந்த தகவல்களை வைத்து மேறகொண்ட நடவடிக்கைகள் என்னவென்று சட்டமா அதிபரே தீர்மானிக்க வேண்டும்.ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஆணைக்குழு தகவல் சேகரிப்பை விட நீதிமன்ற அதிகாரங்களைக் கொண்ட விதமாக செயற்படுகிறது.

இவ்வாறு ஆணைக்குழுவிற்கு செயற்பட முடியாது. நீதிமன்ற தீர்ப்புகளுக்கு மீண்டுமொரு தீர்ப்பை வழங்கும் அதிகாரம் பிரிதொரு நீதிமன்றத்திற்கே உள்ளது. தற்போதைய ஆணைக்குழுவின் அறிக்கை நீதிமன்ற கட்டமைப்பை அவமதித்ததாக செயற்படுகிறது. உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளுக்கு ஆணைக்குழு மேலதிக பரிந்துரைகளை வழங்கியுள்ளது. இவ்வாறான நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பரிந்துரைகளை வழங்கும் அதிகாரம் ஆணைக்குழுவிற்கு இல்லை.

அரசியலமைப்பின் உறுப்புரை 4/3 இன் பிரகாரம் மக்களுடைய நீதிசார்ந்த அதிகாரம்(Judicial Power of People) பாராளுமன்றத்திற்குள்ளது எனக் குறிப்பிடுகிறது. அந்த பலத்தை பாராளுமன்றம் நீதிக் கட்டமைப்பிற்கு வழங்கியுள்ளது. நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பரிந்துரைகளை வழங்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு சட்டமா அதிபர் ஏலவே அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெளிவந்துள்ள ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை சம்பூரணமற்றது.சாட்சியங்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை. பகிரங்கப்படுத்தப்படாத சாட்சியங்கள் இல்லாமல் எவ்வாறு அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியும்? ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை 5 பாகங்களைக் கொண்டது. அதில் ஒரு பாகம் தான் வழங்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபருக்குக் கூட சம்பூர்ணமான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.இவ்வாறு தகவல்களை மறைக்க முடியுமா? ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்களில் எங்களுக்கு சந்தேகமுள்ளது. சகல சாட்சியங்களையும் உள்வாங்கினார்களா என்ற சந்தேகம் எமக்குள்ளது..” எனத் தெரிவித்திருந்தார்.