(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியை கைது செய்ய விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பி.சி.ஏ.டப்ளியூ.பி. எனப்படும் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேனுகா ஜயசுந்தரவின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர் இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளுக்காக, பிரதான பெண் பொலிஸ் பரிசோதகர் சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர், செவனகல பொலிஸ் நிலையம் சென்றுள்ள நிலையில், செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்திலிருந்து விசாரணைகளை தவிர்க்க விடுமுறையில் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது.
செவனகல பொலிஸ் நிலையத்தில் அண்மையில் பணிக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பயில் நிலை பெண் பொலிஸ் கான்ஸ்டபிள், பாலியல் பலாத்கார சம்பவத்தின் பின்னர் கொழும்புக்கு வந்து பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியக பொறுப்பதிகாரியை சந்தித்து முறைப்பாடளித்துள்ளார்.
இந் நிலையிலேயே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று தினம் ( 14) செவனகலைக்கு சென்றுள்ள பொறுப்பதிகாரி சமந்தி ரேனுகா தலைமையிலான குழுவினர், பாலியல் பலாத்காரம் நடந்த இடம் உள்ளிட்டவற்றை மேற்பார்வைச் செய்து அறிக்கையிட்டுள்ளனர்.
செவனகல பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் வாக்கு மூலம் பெற்ற பின்னர் மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பணியகம் நடவடிக்கைஎ டுத்துள்ளதாக அறிய முடிகிறது.