இலாபமீட்டும் சீனி நிறுவனங்களை விற்பது ஏன்?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சீனி நுகர்வில் கிட்டத்தட்ட 10% பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது இத்தொழிற்சாலைகள் அமைந்துள்ள குறித்த பகுதியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
அதுமட்டுமின்றி இந்தத் தொழிற்சாலைகளின் வருமானத்தைப் பயன்படுத்தி,1,200 மில்லியன் ரூபா செலவில் இரண்டு புதிய கம்போஸ்ட் உர தொழிற்சாலைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதற்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. மேலும் இப்பகுதியின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்திக்கும் இந்நிறுவனங்கள் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.
கடந்த ஆண்டு செவனகல சீனி தொழிற்சாலையால் 3 பில்லியன் ரூபாவை அதிகூடிய இலாபமாக ஈட்ட முடிந்தது.பெல்வத்தை தொழிற்சாலையும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வருடமும் இலபகராமான நிறுவனமாக முன்கொண்டு செல்ல முடியுமாகவுள்ளது.
இதையும் தாண்டி, குறித்த இந்த இரண்டு தொழிற்சாலைகளாலும் கடந்த மார்ச் மாதத்தில் 350 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்க முடிந்தது. இருந்த போதிலும், குறித்த இந்நிறுவனங்களில் இருந்து அரசுக்கு வரும் வருமானம் இல்லாமலாக்கப்பட்டு 2011 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படும் சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டத்தின் கீழ் அரசாங்கத்திடம் கையகப்படுத்தப்பட்ட பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளை மீண்டும் முன்னைய முதலீட்டாளர்களுக்கே வழங்க அரசாங்கம் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கவனம் செலுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.